Sep 12, 2019, 6:13 PM IST
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் ஸ்ரீஅன்னை வேளாங்கண்ணி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் பேருந்து இன்று மாலை மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றிக்கொண்டிருந்தது. பெருங்களத்தூர் பகுதியில் பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பேருந்தில் இருந்து புகை வந்ததும் ஓட்டுனர் உடனடியாக சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார். இதனையடுத்து, பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகள் அலயறியடித்துக் கொண்டு வெளியேறினர். பின்னர், சிறிது நேரத்தில் தீ மளமள வென பேருந்தில் அனைத்து இடங்களிலும் பரவியது.
இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேருந்து தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.