Jun 15, 2024, 10:22 PM IST
நர்சிங் படிப்பை முடித்துவிட்டு, மருத்துவ துறையிலும், அதன் பிறகு சிறு சிறு வாங்கிக்கங்களும் செய்து வாழ்க்கையை நகர்த்தி வந்தவர் தான் உமாராணி. துவக்கத்தில் பசியால் வாடும் மக்களை கண்டு, அவர்களுக்கு உதவும் வகையில் உணவை தயாரித்து அதை பொட்டலமாக கட்டி, அவர்களுக்கு விநியோகித்து வந்துள்ளார் உமாராணி.
நாளடைவில் மக்களுக்கு அதிக அளவில் உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் தவமொழி என்கிற அறக்கட்டளை மூலம் சென்னை கீழ்கட்டளை பகுதியில் உள்ள சிறிய இடத்தில் சுகாதாரமான முறையில் சமைத்து, பசியோடு வரும் நபர்களுக்கு அளித்து வருகின்றார். ஆனால் பலர் குடித்துவிட்டு தனது கடைக்கு வருவதை கண்டு பல நேரங்களில் பத்திரகாளியாக தான் மாறியுள்ளதாகவும் நமது ஏசியாநெட் தமிழ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் நமக்கு அளித்த தகவலில், என் மீது பொறாமை கொண்ட பலர், நான் கெட்டுப்போன உணவை விநியோகிப்பதாக கூறி, உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வந்து எனது இடத்தை பார்த்து அனைத்து நல்லவிதத்தில் உள்ளது என்று கூறி என்னை பாராட்டிவிட்டு சென்றனர் என்றார் அவர்.
வயது முதிர்ந்தவர்கள், உடலில் வலிமை குறைந்து தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றவர்கள் கூட இன்று என்னிடம் வந்து நல்ல முரையில் வாழ்ந்து வருகின்றனர் என்றார். என்னை காண வருபவர்கள் என்னை ஒரு தேவதையை போல நடத்தும்போது நான் சரியான பாதையில் தான பயணிக்கிறேன் என்ற எண்ணம் உள்ளது என்றார் அவர்.