Jul 19, 2022, 5:49 PM IST
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பாக கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றின் கதவணைக்கு வினாடிக்கு 1,16,,400 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 1,15, 400 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய் துறையினர் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாயனூர் கதவணையில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்காலில் 200 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 400 கன அடியும் பாசத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனிடையே, கட்டளை காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மேயர் கவிதா கணேசன் மற்றும் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.