அம்பேத்கர்.. உடைக்கப்பட்டதும்.? நிறுவப்பட்டதும்..! முழு வீடியோ

Aug 26, 2019, 6:11 PM IST

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஜீப் ஒன்று தீவைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது.

பதட்டமான தொகுதியான வேதாரண்யம் காவல்நிலையத்தில் வெறும் மூன்று போலீசாரே இருந்துள்ளனர். அவர்களால் சிலையை உடைப்பதை பார்க்க முடிந்ததே தவிர தடுக்க முடியவில்லை. வன்முறையாளர்கள் ஒருமணி நேரம் நிதானமாக எந்தத்  தொந்தரவும் இல்லாமல் கலவரம் செய்தனர். 

இதனிடையே வேதாரணியம் பகுதிக்கு வந்த அகஸ்தியன் பள்ளி கூத்ததேவன்காடு பாபு ராஜன்    ,  ராஜாளிக் காட்டை சரத்குமார் ஆகிய 2 பேரும் மர்ம கும்பலால் கத்தியால் தாக்கப்பட்டனர் இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது கண்டித்தும் அதனை உடைத்தவர்களை  கைது செய்யக் கோரியும் நாகை நாகூர் நெடுஞ்சாலையில் வெளிப்பாளையம் வண்டி பேட்டையில்  விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தகவல் அறிந்து வந்த நாகூர் போலீசார் இதை பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்ததையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்  

இந்த சம்பவத்தால் வேதாரண்யம் முழுவதும் பதற்றம் நிலவியது . இதனால் நகர் முழுவதும் தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்னை தெரேசா ராஜசேகரன் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான  போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர் . அதிவிரைவு படை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது . 
 வன்முறை காரணமாக வேதாரணியம் இருந்து நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி திருவாரூர் தஞ்சாவூர் கோடிக்கரை  வரை  உள்ள  பல பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் ஓ,எஸ்,மணியன் மற்றும்  நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டுள்ளனர்.கலவரம் குறித்த தகவல் அறிந்ததும் பதறி  போன நாகை எம்எல்ஏ  தமிமுன் அன்சாரி வேதாரண்யம் விரைந்து வந்து, அமைச்சர் ஓ.எஸ்.மணியனை சந்தித்து, நிலைமைகளை கேட்டறிந்ததோடு பதட்டத்தை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்தனர்.

அதன்படி அம்பேத்கர் சிலை இருந்த இடத்தில் உடனடியாக புதிய சிலை நிறுவப்பட்டது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி ஆகியோர் உடன் இருந்தனர் .
தற்போது புதிய சிலை அமைக்கபபட்டதையடுத்து அங்கு அமைதி திரும்பி பதற்றம் தணிந்துள்ளது. மேலும் வன்முயையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.