Video : காட்பாடி அருகே குறவர் இன மக்கள் வீட்டை இடிக்க முயற்சி! துணை வட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

Jun 12, 2023, 8:09 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பொன்னையை அடுத்த குறவன் குடிசை பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட மலை குறவர்கள் இன பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். 1960களில் காமராஜரின் ஆட்சிக்காலத்தில் அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு ஓட்டு வீடு கட்டித்தரப்பட்டது. இன்று குடும்பங்கள் பெரிதாகியும் பலர் அந்த வீடுகளில்தான் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக நிலமற்ற பழங்குடியினருக்கு அதே பகுதியில் உள்ள அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் நிலம் ஒதுக்கி வீடு கட்டி தர வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியருக்கும், காட்பாடி வட்டாட்சியருக்கும், பல முறை மனுக்கள் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 08-06-2023 அன்று திடீரென ஈஸ்வரி என்பர் வீட்டின் அருகில் இருந்த இடத்தில் மாட்டு கொட்டகையை காட்பாடி துணை வட்டாட்சியர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் என 40 க்கும் மேற்பட்டோர் புல்டோசர் சகிதம் வந்து இடிக்க முயன்றுள்ளனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சிலர் காயமடைந்தனர்.

காட்பாடி துணை வட்டாட்சியர் மற்றும் காவல்துறையின் அத்துமீறல்,எதேச்சதிகாரப் போக்கை கண்டித்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் முன்பு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பி.நதியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு காட்பாடி வட்டாட்சியரை சந்தித்து வீடு இல்லாதவர்களுக்கு அதே பகுதியிலேயே பட்டா வழங்கி வீடு கட்டித்தர வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். பிறகு வீடுஇல்லாதவர்கள் பட்டியல் கொடுத்தால் மாவட்ட நிர்வாகத்தோடு பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.