Oct 14, 2022, 4:10 PM IST
திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் திருத்தலையூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு உள்ள ஏரி திருச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். தற்போது கொல்லிமலையில் பெய்த மழை காரணமாக அய்யாற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் திருத்தலையூர் ஏரி நிரம்பியது. இதன் உபரி நீர் விளை நிலங்கள் வழியாக வந்து திருத்தலையூர் சிவன் கோவிலை சுற்றியும், இந்திரா காலனி குடியிருப்பு பகுதிகளிலும் உள்ளே புகுந்தது.
இதன் காரணமாக சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. தகவல் அறிந்த முசிறி வட்டாட்சியர் சண்முகப்பிரியா விரைந்து சென்று பார்வையிட்டார். அப்போது தண்ணீர் மேலும் உயராமல் வடியும் வகையில் பொக்லின் இயந்திர உதவியுடன் வாய்க்கால் அமைக்கபட்டது. பொதுமக்களுக்கு உணவு வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்த நிலையில் அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு உரிய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.