Watch : முசிறி அருகே பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் பெரிய கூரைவீடு தீக்கிரையானது!

Oct 26, 2022, 4:23 PM IST

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தா.பேட்டை தேவாங்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன் (70). மாட்டு வியாபாரியான இவர் தனது கூரை வீட்டில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது ராக்கெட்வெடி வெடித்தபோது அதிலிருந்து வந்த தீப்பொறி கூரையின் மீது விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கூரை தீப்பிடித்து எரிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உடனடியாக கூரையின் மீது தண்ணீர் ஊற்றினர். ஆனாலும் தீ மள, மளவென எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் முனியாண்டி தலைமையில் மீட்புபடை குழுவினர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதும் கட்டுப்படுத்தி அணைத்தனர்.

இதில் அந்த வீட்டின் குடிசை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பக்கத்து வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.