தாமிரபரணி ஆற்றை தூய்மையாக வைப்பதற்கு தன்னார்வலர்களுக்கு பயிற்சி!!

Sep 17, 2022, 5:55 PM IST

நெல்லை மாவட்டத்தில்  நெல்லை நீர்வளம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு 1200 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 25ஆம் தேதி உலக ஆறுகள் தினம் அனுசரிக்கப்படுகிறது . இதனைத் தொடர்ந்து நெல்லை நீர்வளம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது . இதனையொட்டி நெல்லை நீர்வளம் அமைப்பில் இணைந்துள்ள தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 

இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். இதில் தாமிரபரணி ஆற்றை தூய்மையாக பாதுகாப்பது குறித்தும் நீர்வளம் பாதுகாத்தல் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் 250 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் நீரும் கலாச்சாரமும்,  நீர் தர கண்காணிப்பு , ஆகியவை குறித்து செயல் முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது  முன்னதாக  மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பொருநை நதி குறித்த கையேட்டினை வெளியிட்டார். 25ஆம் தேதி தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.