நெல்லையில் ஒரு நீயா? நானா? வென்றது திமுகவா? காங்கிரஸா? விவாதத்தை முடித்து வைத்தது இவர்தான்!!

Sep 23, 2022, 8:54 PM IST

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனும் இந்த கோரிக்கை தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். அதே சமயம் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகருமான அப்பாவு தனது பகுதிக்கு உட்பட்ட வள்ளியூரில் தான் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைய வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.

இறுதியில் ஆளுங்கட்சி என்பதால் தற்போது வள்ளியூரில் தலைமை மருத்துவமனை அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிலையில் இன்று நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு புதிய கட்டிடங்கள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விழா மேடையில் நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் பேசும்போது, ''அமைச்சர் மா.சுப்ரமணியன் துடிப்பாக செயல்பட்டு வருகிறார். எப்படியும் நமது பகுதிக்கு தலைமை மருத்துவமனை வராது. இருந்தாலும் அமைச்சரிடம் ஒரு கோரிக்கையை வைப்போம் என்ற அடிப்படையில் நாங்குநேரியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைத்து தர வேண்டும்'' என்றார். 

அதற்கு அடுத்தபடியாக சபாநாயகர் அப்பாவு பேசும்போது வழக்கம் போல் தமிழக முதல்வரை பாராட்டி பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''எல்லோருக்கும் பொதுவாக வள்ளியூரில் தலைமை மருத்துவமனை அமைய உள்ளது. களக்காடு நாங்குநேரி வள்ளியூர் மக்கள் பயன்பெறுவார்கள். இது என் ஊர் உன் ஊர் என்று இல்லை. எல்லோருக்கும் பொதுவானது'' என்று ரூபி மனோகரனை உசுப்பேத்தும் வகையில் பேசினார்.

இருவரும் அமைச்சர் முன்னிலையில் மருத்துவமனை கேட்டு நீயா நானா போட்டியில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்கச் செய்தது. இறுதியாக இருவருக்கும் பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசினார். அவர் பேசும்போது, ''நாங்குநேரியில் அரசு தலைமை மருத்துவமனை வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கேட்டுக்கொண்டார். வள்ளியூரில் அதை அமைக்க வேண்டுமென சபாநாயகர் கேட்டுக்கொண்டார். 

எனவே மருத்துவ அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி வள்ளியூர் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இரு இடங்களில் தலா 45 கோடி ரூபாயில் அரசு தலைமை மருத்துவமனை அமைய உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை என்று விதி உள்ளது. ஆனால் நெல்லையில் பல்வேறு தரப்பட்ட மக்கள் இருப்பதால் இரண்டு மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இருப்பினும் நாங்குநேரி தொகுதி மக்கள் நலனுக்காக அங்கு ரூ.10 கோடியில் விபத்து பிரிவு மருத்துவமனை அமைக்கப்படும்'' என்று கூறி விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.