Sep 19, 2022, 2:43 PM IST
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளதால் இந்த வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது.
இந்த நிலையில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்புகள், விளைநிலங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் அருகே உணவு தேடி உலா வருவது வழக்கமாகி உள்ளது.
அதேபோல் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று வழி தவறி உதகை நகருக்குள் வந்துள்ளது. அப்போது இரவில் நகரப் பகுதிகளில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் புள்ளி மானை கடித்து தாக்கியதில் பலத்த காயமடைந்தது.
மேலும் இதனை அறிந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானை மீட்ட நிலையில், பலத்த காயத்தின் காரணமாக புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது.
இதனை அடுத்து உடலை உதகை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறு ஆய்வு செய்து உடலை புதைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.