Watch : மதுரையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் போராட்டம்!!

Sep 20, 2022, 4:25 PM IST

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் அண்ணா பேருந்து நிலையம், திருவள்ளுவர் சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.  

இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் பால் முருகன் பேசினார். போக்குவரத்து ஓய்வூதிய நலத் சங்க துணை பொதுச்செயலாளர் தேவராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதி ராஜா, ஊரக வளர்ச்சி துறை ஒவூதியர் சங்க மாநில கவுரவத் தலைவர் பரமேஸ்வரன், நெடுஞ்சாலை துறை ஓய்வூதிய நலச்சங்க தலைவர் திருவேங்கடராஜ் உள்ளிட்டோர் பேசினர். 

மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் 70 வயது முடிந்தவர்களுக்கு  கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்க வேண்டும், பயணப்படி நிலுவைகளை 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தா தொகையை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு அங்கன்வாடி நிலை ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூ. 7850 வழங்க வேண்டும், அரசு விதிகளுக்கு மாறாக பணி நிறைவு நாளில் சஸ்பெண்ட் செய்வதை நிறுத்த வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டண சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் ஜெயராமன் நன்றி கூறினார். தர்ணா போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.