Feb 10, 2023, 10:57 AM IST
ஓசூர் பேருந்து நிலையம் அருகே பெரிய மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பல மீன் கடைகளில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மீன்கள் தரம் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்ற வன்னம் இருந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில் இன்று மாநகராட்சி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீன் சந்தையில் உள்ள மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை உயிருடன் வளர்த்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கடையில் இருந்த கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.
அதைப்போல மீன் சந்தையில் உள்ள கடைகளில் தரம் இல்லாத மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மீன் கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட நெகிழி பாக்கெட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீன் கடைகளில் தடை செய்யப்பட்ட மீன்களையும், தரம் இல்லாத மீன்களையும் விற்பனை செய்யக்கூடாது என மீன் கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.