Feb 25, 2023, 11:04 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். இன்று பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்த மண் இந்த ஈரோடு. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் வாழ்ந்த ஊர் இந்த ஈரோடு. தலைவர் கலைஞர் அவர்கள் குடியிருந்த ஊர் இந்த ஈரோடு. ஏன் தி.மு.க.வினுடைய அடித்தளமே இந்த ஈரோடுதான்.
ஈ.வி.கே.சம்பத்தினுடைய மைந்தனுக்கு கலைஞருடைய மைந்தன் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். இதுதான் வரலாறு. இந்த இடைத்தேர்தல் ஏன் வந்தது. எந்த சூழ்நிலையில் வந்திருக்கிறது. எப்படிப்பட்ட சூழ்நிலையில் வந்திருக்கிறது என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரவேண்டும், ஆட்சிப் பொறுப்புக்கு வருகிற நேரத்தில், இவையெல்லாம் எங்களுக்கு செய்து தர வேண்டும். தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள், உறுதிமொழிகள், அவைகளெல்லாம் நிறைவேற்றித் தரவேண்டும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் எல்லாம் வாக்களித்தீர்கள். வாக்களித்த நம்பிக்கையோடு, இன்றைக்கு நீங்கள் இருக்கிறீர்கள்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிப் பொறுப்பேற்று இந்த இரண்டாண்டு காலத்தில், செய்திருக்கக்கூடிய சாதனைகளை சொல்ல வேண்டுமென்று சொன்னால், ஒரு மிகப்பெரிய பட்டியலை எடுத்துச் சொல்ல வேண்டும். மகளிருக்கு இலவச பேருந்து பயண வசதி, தேர்தல் நேரத்தில் சொன்னோம். ஆட்சிக்கு வந்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதுடன் கோட்டைக்குச் சென்று ஐந்து கையெழுத்துகளை நான் போட்டபோது, அந்த ஐந்து கையெழுத்துகளில் ஒரு கையெழுத்துதான் மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற அந்த திட்டத்திற்கான கையெழுத்து. இது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.
இன்றைக்கு, மகளிர் எல்லாம் பேருந்தில் போகிற காட்சியெல்லாம் நாம் பார்க்கிறோம். எவ்வளவு சந்தோஷமாக, எவ்வளவு மகிழ்ச்சியாக, அலுவலகத்திற்குப் போகக்கூடியவர்கள், கல்லூரிகளுக்கு போகக்கூடியவர்கள், தன்னுடைய தொழில் செய்யக்கூடிய இடத்திற்கு போகக்கூடியவர்கள், உறவினர்கள் இடத்திற்கு போகக்கூடியவர்கள், திருமண நிகழ்ச்சிக்குப் போகக்கூடியவர்கள், துக்க நிகழ்ச்சிக்குப் போகக்கூடியவர்கள், அந்த மகளிர் இன்றைக்கு இலவசமாக பயணம் செய்கிறபோது, அதில் மிச்சப்படக்கூடிய தொகையைப் பயன்படுத்திக் கொண்டு இன்றைக்கு குடும்பத்திற்கு வேறு செலவுகளை செய்யக்கூடிய ஒரு அபூர்வமான திட்டத்தை இன்றைக்கு நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.
பெருமையோடு சொல்கிறேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது, மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டத்தை நம்முடைய தமிழ்நாட்டில்தான் நாம் நிறைவேற்றி இருக்கிறோம். வேளாண் பெருங்குடி மக்களுக்கு, உழவர்களுக்கு இலவச மின்சார திட்டம். இந்தத் திட்டத்திற்கு முதன்முதலில் இந்தியாவிலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்திய திட்டம்தான் இலவச மின்சார திட்டம். இனிமேல் இலவச மின்சாரம் என்று நாங்கள் அறிவித்துள்ளதால், இனி மின்சார கட்டணமாக ஒரு பைசா கூட தர வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி, இலவச மின்சார திட்டத்தை கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார். அது தொடர்ந்து நடந்தது.
இடையில் வந்த அ.தி.மு.க. ஆட்சி அதை எப்படியெல்லாம் தடுக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் எல்லாம் ஈடுபட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அதை தொடர்ந்துதான் இப்போது நாம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஒன்றரை ஆண்டு காலத்திலே, ஒன்றரை இலட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை பெருமையோடு நான் குறிப்பி ட விரும்புகிறேன். அதேபோல, உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள். உலகத்திலேயே இப்படி ஒரு போட்டியை சிறப்பாக நடத்தியதாக வரலாறு கிடையாது.
இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல, உலக அளவிலே பெருமைப்படத்தக்க வகையிலே செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி, பல்வேறு பாராட்டுகளைப் பெற்றிருக்கிறோம். வள்ளலார் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக கொண்டாட வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம், அன்னைத் தமிழில் அர்ச்சனை, அதேபோல் பெரியார் நெஞ்சிலே தைத்து கொண்டிருந்த முள், அது உங்களுக்கு தெரியும், அந்த முள்ளை அகற்றிட வேண்டும் என்பதற்காகத்தான் தலைவர் கலைஞர் அவர்கள், அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது எல்லாம் அதற்காக பல்வேறு முயற்சிகளில் அவர் ஈடுபட்டார்.
அது என்னவென்று கேட்டால், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்று அவர் எண்ணினார். நீதிமன்றமும் அதற்கு ஒரளவிற்கு சம்மதம் தந்தது. ஆனால் நிறைவேற்றப்பட்டதா என்றால் இல்லை. ஆனால் பெருமையோடு சொல்கிறேன், கலைஞர் அவர்கள் என்ன நினைத்தாரோ, தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சிலே தைத்த முள்ளை இன்றைக்கு நம்முடைய ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி அகற்றி இருக்கிறது என்பதை பெருமையோடு நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள். இருபது கலை அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கக்கூடிய புதுமைப் பெண் திட்டம் என்கிற அருமையான திட்டத்தை நாங்கள் அறிவித்து அதையும் நாங்கள் இரண்டாண்டு காலமாக நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம். நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவை இரண்டு முறை சட்டமன்றத்தில் நிறைவேற்றி நாங்கள் அனுப்பி வைத்திருக்கிறோம் ஆனால் இதுவரை தமிழகத்தினுடைய ஆளுநரோ அல்லது ஒன்றிய அரசோ அதைப்பற்றி சிந்திக்கவில்லை, கவலைப்படவில்லை. 85% பணிகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். இன்னும் மிச்சம் இருக்கிறது, இல்லை என்று மறுக்கவில்லை.
5 ஆண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைத்தான் நாங்கள் தேர்தல் வாக்குறுதியாக சொல்லி இருக்கிறோம். 5 ஆண்டுகள் தேவையில்லை, இந்த ஆண்டுக்குள்ளாக எல்லா பணிகளையும் நிறைவேற்றி காட்டுவேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி மிச்சம் இருக்கக்கூடிய அறிவிப்புகளில் ஒரு முக்கியமான ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். மக்களே மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்.
அதுதான் பெண்களுக்கு வழங்கக்கூடிய உரிமைத் தொகை. மாதம் 1000 ரூபாய் வழங்குவோம் என்று சொன்னோம். நிதிநிலையை மட்டும் ஒழுங்காக வைத்திருந்தீர்கள் என்றால், நாங்கள் வந்தவுடன் அதையும் நிறைவேற்றி இருப்போம். உறுதியாக சொல்கிறேன், வருகிற மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது, அந்த நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ.1000 எப்பொழுது வழங்கப்படும் என்று அறிவிக்க இருக்கிறோம். இது ஸ்டாலின் சொல்லும் வார்த்தை. எடப்பாடி சொன்ன வார்த்தையல்ல. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம், சொல்லாததையும் செய்வோம், சொன்னதையும் செய்து கொண்டே இருப்போம். இது மக்களுக்காக பாடுபடக்கூடிய ஆட்சி, இப்படிப்பட்ட ஆட்சிக்கு நீங்கள் எல்லாம் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
இதையும் படிங்க..ஸ்மார்ட் வாட்ச் முதல் குத்து விளக்கு வரை.. வீடு தேடி வரும் பரிசுகள்! ஈரோடு கிழக்கு தொகுதி பரிசு பொருள் லிஸ்ட்!
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்