Nov 12, 2022, 4:58 PM IST
கோவை மாநகராட்சி 34 வது வார்டு மாமன்ற உறுப்பினராக பதவி வைத்து வருபவர் திமுகவை சேர்ந்த மாலதி. இவர் கவுண்டம்பாளையம் பி என் டி காலனி ராஜன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டிலிருந்து சுமார் 10 வீடு தள்ளி வசித்து வருபவர் சுபாஷ். இந்த நிலையில் சுபாஷின் வீட்டின் முன்பாக அவர் நான்கு வேப்பமரக்கன்றுகளை வைத்து வளர்த்து வருகிறார்.சுமார் 10 அடி உயரம் வரை வேப்ப மரக்கன்றுகள் வளர்ந்த சூழலில் அங்கு கார் நிறுத்துவதற்கு இடையூறாக இருப்பதாக கூறி மாமன்ற உறுப்பினர் மாலதி அந்த மரக்கன்றுகளை அப்புறப்படுத்துமாறு கூறிவந்துள்ளார்.
ஆனால் சுபாஷ் அந்த மரக்கன்றுகளை அப்புறப் படுத்தாததையடுத்து இன்று காலை அங்கு வந்த மாலதி சுபாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மரக்கன்றுகளை முறித்து எறிந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆவேசமடைந்த மாலதி மரக்கன்றுகள் முறித்தது தொடர்பாக யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்துக்கொள், யாரை வேண்டுமானாலும் அழைத்து வந்து பார் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியபடியே அங்கிருந்து சென்றுள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த சுபாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே திமுக மாமன்ற உறுப்பினர் மரக்கன்றுகளை முறித்து அராஜகத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.