Jan 3, 2023, 12:27 PM IST
கோவை ஒண்டிபுதூர் பகுதியில் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பதாக கூறி தென்னரசு என்பவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் ஆதிதமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் பணம் கொடுக்காமல் மதுவகைகள் கேட்டு ரகளை செய்வதாக கடை பணியாளர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை ஒண்டிபுதூர் பகுதில் 1698 என்ற பதிவு எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை அமைந்து உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர் எசடியான் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த பகுதிய சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மது வாங்க கடைக்கு சென்ற போது மதுவிற்கு அதிக பணம் கேட்டதாக கூறி, ஆதிதமிழர் கட்சியை சேர்ந்த தென்னரசு என்பவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மதுவகைகளுக்கு ரசீது கேட்டு கேள்வி எழுப்பி தென்னரசு ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் ஆதி தமிழர் பேரவை அமைப்பினை சேர்ந்த தென்னரசு என்பவர் கடையில் பணம் கொடுக்காமல் மது கேட்டு மிரட்டுவதுடன் பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும், தங்கள் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தவறான புகாரினை கொடுப்பதாகவும் கடையின் மேற்பார்வையாளர் ஏசடியான் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளருக்கு புகார் அனுப்பியுள்ளார். மேலும் இது குறித்து டாஸ்மாக் தொழிற்சங்கம் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.