இலவச டிக்கெட் வாங்க மறுத்த மூதாட்டி மீது வழக்குப் பதிவு இல்லை; கோவை மாவட்ட காவல் அதிகாரி விளக்கம்!!

Oct 1, 2022, 7:26 PM IST

கோவையில் கடந்த வியாழக்கிழமை காந்திபுரத்தில் இருந்து மதுக்கரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறிய மூதாட்டி துளசியம்மாளுக்கு இலவச பேருந்து பயணத்திற்கான பயணச்சீட்டை நடத்துநர் வழங்கினார். நடத்துனரிடம் தான் ஓசி பயணம் செய்ய விரும்பவில்லை என்றும்,  பயணத்திற்கான கட்டணத்தை வழங்குவதாகவும் மூதாட்டி துளசியம்மாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதுதொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அந்த மூதாட்டி உள்பட நான்கு பேர் மீது கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் இன்று காலை வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின. மூதாட்டி உள்ளிட்ட 4 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

உங்க சர்வாதிகார போக்குக்கு விரைவில் மக்கள் முடிவு கட்டுவார்கள்! திமுகவை அலறவிடும் அண்ணாமலை..!

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ''சமூக வலைதளங்களில் மூதாட்டி துளசியம்மாள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பகிரப்படும் தகவல்கள் தவறானவை. மதுக்கரை காவல் நிலையத்தில் அதுபோன்று எந்த வழக்கும் பதியப்படவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள எந்த காவல்நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்படாத நிலையில் தவறான தகவல் எப்படி பரவியது என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். தகவல் பரப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

இதேபோல் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டு மற்றும் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக மேட்டுப்பாளையத்தில் 3 பேரும் ,பெள்ளாச்சியில் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார். 

'ஓசியில் போகமாட்டேன் 'துளசியம்மாள் பாட்டி பின்னணியில் அதிமுக ஐடி விங்: நாடகம் அம்பலம்.. தேவையா இந்த அசிங்கம்?

ஓசி டிக்கெட் என்று அமைச்சர் பொன்முடி கூறியிருந்த நிலையில், கோவை மூதாட்டி காசு கொடுத்து டிக்கெட் வாங்க முயன்றதாக கூறப்பட்டது. அதேசமயம் அவரை அவ்வாறு நிர்பந்தப்படுத்தியது அதிமுக ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.