Oct 21, 2022, 4:20 PM IST
கடல் பரப்பில் பறக்கும் விமானங்கள்,மற்றும் 45 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் பறக்கும் விமானங்களை துள்ளியமாக கண்காணித்து,விமானிகளுக்கு சமிக்கைகள் கொடுக்கும், அதி நவீன கருவிகள், சோதனை அடிப்படையில் சென்னை விமானநிலையத்தில் புதிதாக பொறுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் ஏா் டிராபிக் கண்ட்ரோல் எனப்படும், வான் போக்குவரத்து கட்டுபாட்டு மையத்தில், சர்வதேச நூறாவது ஆண்டு வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம் கொண்டாடப்பட்டது.லண்டன் நகரில் உள்ள விமானநிலையத்தில் 1922 ஆம் ஆண்டு அக்டோபா் 21 ஆம் தேதி, முதன் முதலில் ஏா் டிராபிக் கண்ட்ரோல் எனப்படும் ஏடிசி தொடங்கப்பட்டது. சா்வதேச ஏா் டிராபிக் கண்ட்ரோல் நூற்றாண்டு நிறைவு விழா சா்வதேச அளவில் நடந்தது.
சென்னை விமானநிலைய ஏடிசியில் சுமாா் 500 போ் பணியில் உள்ளனா். அவா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை ஏடிசி தற்போது, நாள் ஒன்றுக்கு சுமாா் 1,000 க்கும் மேற்பட்ட விமானங்களை கையாளுகின்றன.அதில் பயணிகள் விமான சேவைகள், மற்றும் சரக்கு விமானங்கள், தனி சிறப்பு விமானங்கள், கொரியா் விமானங்கள், சென்னையில் தரையிறங்காமல், சென்னை வான்வெளியை கடந்து செல்லும், வெளிநாட்டு விமானங்கள் என்று பல வகைப்படும்.அதுமட்டும் இல்லாமல், சென்னை வான்வெளி கட்டுப்பாட்டை சுற்றியுள்ள சுமாா் 250 கிமீ பரப்பளவையும் உள்ளடக்கியதாகும். இதனால் சென்னை விமானநிலைய ஏா் டிராபிக் கண்ட்ரோல் டவா், 24 மணி நேரமும், மழை, வெயில், பனி, இடி, மின்னல் உள்ளிட்ட அனைத்து நேரங்களிலும் ஓய்வு இல்லாமல் தொடா்ச்சியாக செயல்படுகின்றன.
சென்னை விமான நிலைய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் வாயிலாக, சென்னை விமானநிலையத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 400 க்கும் மேற்பட்ட பயணிகள் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்பு 500 க்கும் அதிகமான விமான சேவைகள் இருந்தன.தற்போது
ஒரு மணி நேரத்திற்கு 36 விமானங்கள் வரை இயக்கப்படடுகின்றன.
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில், செயற்கைகோள் மூலம், கடல் பரப்பின் மேல் பறக்கும் விமானங்களை, கண்காணிப்பதற்கான அதிநவீன கருவிகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. இது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பழைய கருவிகள் மூலம், கடல் பரப்பில் பறக்கும் விமானங்களை துல்லியமாக கண்காணித்து சமிக்கை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால், எஸ்.பி.ஏ.டி.எஸ்.பி., என்ற நவீன தொழில்நுட்பங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதே போல, 45 ஆயிரம் அடி உயரம் பறக்கும் விமானங்களின், விமானிகளுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருக்கிறது. இதற்காக ஐ.பி.வி.எச்.எப்., என்ற இன்டர்நெட் புரோட்டாக்கால், அதி உயர அலைவரிசை தொழில்நுட்பமும், செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை உட்பட, நாடுமுழுதும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தொழில்நுட்பம் சோதனை முடிவடைந்து, அமலுக்கு வந்ததும், மிக உயரத்தில் 45 ஆயிரம் அடிக்கும் மேலாக பறக்கும் விமானங்களின், விமானிகளையும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனா்.