Video : நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Oct 12, 2022, 2:55 PM IST

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை முதலே கோவில் நடை திறக்கப்பட்டு கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து தங்க சப்பரத்தில் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து கோவில் யானை காந்திமதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கொடிபட்டம் கோவில் பிரகாரத்தில் வலம் வர எடுத்துவரப்பட்டது.

பின்னர் வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.