இந்தியாவிலேயே முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ.. அடித்து தூள் கிளப்பும் எடப்பாடி ..!வீடியோ..

Nov 29, 2019, 4:01 PM IST

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1,000 ரூபாயுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும், சொகுசு பேருந்து சேவை, இ-ஆட்டோ சேவை, இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து அசத்தியுள்ளார். 

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்காக ரூ.2,363 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

இதனிடையே,  உள்ளாட்சி தேர்தல் தேதி எந்த நேரத்திலும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பொங்கல் பரிசுத் திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 137 வனச்சரகர்களுக்கு பணி நியமன ஆணைளையும், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனரகத்தின் 32 உதவிபொறியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

இதேபோல், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி மூலம் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 43 இருக்கைகள் கொண்ட வால்வோ சொகுசு பேருந்து வாங்கப்பட்டுள்ளது. அதையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதேபோல, மின்சாரத்தில் இயங்கும் இந்தியாவின் முதல் எம்-ஆட்டோக்களையும் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். ஒரே நேரத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி அசத்தியுள்ளார்.