மருத்துவர்கள் போராட்டம் எதற்கு..? அடுக்கடுக்கான கோரிக்கைகள்..! வீடியோ

Oct 31, 2019, 5:37 PM IST

கோரிக்கை 1 : மருத்துவ உயர்கல்வி படிப்புகளில் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இந்த 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள் தங்களை தரம் உயர்த்திக் கொள்வதில் சிக்கல்கள் உண்டாகின்றன. ஆகவே மீண்டும் பழைய முறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

கோரிக்கை 2 : தனியார் மருத்துவ கல்லூரிகளில் குறைந்தபட்ச தகுதியாவது இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயித்து இருக்கிறது. ஆனால் இதை அடிப்படையாக வைத்து தமிழக அரசும் பல பணியிடங்களை ரத்து செய்து கொண்டிருப்பதாக அரசு மருத்துவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இவ்வாறு ஒளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் நோயாளிகள் எந்த அளவிற்கு அதிகமாக வருகிறார்களோ அதே அளவிற்கு படுக்கைகளையும் மருத்துவர்களையும் அதிகரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை 3 : தற்போது 20 ஆண்டுகள் பணியை முடித்த பிறகு தான் அரசு மருத்துவர்கள் நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்வு பெற்று 1.3 லட்சம் ரூபாய் சம்பளத்தை எட்டமுடியும். இளநிலை, முதுநிலை மற்றும்  சிறப்பு படிப்புகளை முடித்து அரசு பணியில் சேரவே மருத்துவர்களுக்கு 30 முதல் 32 வயதிற்கு மேல் ஆகிறது. இதனால் இந்த ஊதியத்தை எட்டுவதற்கு 50 வயது ஆகின்றது என்று மருத்துவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மத்திய அரசு பணிகளில் இருப்பதை போன்று 13 ஆண்டுகளிலேயே பணி உயர்த்தப்பட வேண்டும் என்றும் மற்ற மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தை தமிழ்நாட்டிலும் நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

கோரிக்கை 4 : அரசு பணியில் இருப்பதாக உறுதி அளித்து முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் அந்த படிப்பை முடித்த பிறகு சரியான பணியிடங்களில் நியமனம் செய்யப்படாமல் இருப்பதாகவும் தனியார் கல்லூரிகளில் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவற்றையும் கவனத்தில் எடுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.