சொந்த செலவில் மாணவர்கள் குடும்பத்திற்கு உதவிய பள்ளி தலைமை ஆசிரியர்..! வீடியோ

May 8, 2020, 2:12 PM IST

கரூர் மாவட்டம் ஆத்தூரை அடுத்து உள்ளது நொச்சிப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் நொச்சிப்பாளையம், வடமலைகவுண்டன் புதூர், காந்திநகர் சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 80 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

கொரனோ தொற்று பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இதனை உணர்ந்த அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மேரி தெய்வானை என்பவர் தனது சொந்த நிதி சுமார் 50 ஆயிரம் மதிப்பில் 5 கிலோ அரிசி, உப்பு, புளி, மிளகாய், எண்ணெய் என 10 நாட்களுக்கு ஒரு குடும்பத்தினர் சமைத்து சாப்பிடும் வகையில் ஒரு குடும்பத்திற்கு 750 ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார்.

அவற்றினை மாணவ, மாணவியரின் பெற்றோர் சமூக இடைவெளி விட்டு நின்று வாங்கிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் இருபால் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.