Aug 5, 2019, 4:05 PM IST
பிரிவு 370 காரணமாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் என்றும், தலித்துகளுக்கும், பெண்களுக்கும் நீதி கிடைக்கவில்லை எனவும் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘’லடாக் மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 3 குடும்பங்கள் காஷ்மீரை இத்தனை வருடங்களாக கொள்ளையடித்து வந்தன. நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் ஏழைகளுக்கு கிடைக்கும் எந்த சலுகைகளும், காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கவில்லை’’ என அவர் கூறினார். சட்டப்பிரிவு 35ஏ என்றால் என்ன?
35ஏ என்ற சட்டப்பிரிவானதும் சட்டப்பிரிவு 370ஐ அடிப்படையாகக் கொண்டது. இது காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது. இந்த சட்டப்பிரிவானது காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதை தீர்மானிக்கும் சிறப்பு அதிகாரத்தை அந்த அரசுக்கு வழங்குகிறது. அதோடு, அரசுவேலை, அங்கிருக்கும் நிலங்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட இதரத்திட்டங்களுக்கு யார் தகுதியானவர்கள் யார் என்பதை அம்மாநில அரசே முடிவு செய்யலாம்.
ஜம்மு- காஷ்மீர் வரையரைப்படி அம்மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் எனப்படுபவர் “1911ம் ஆண்டுக்கு முன்பு அம்மாநிலத்தில் பிறந்தவர் அல்லது குடியேறியவர் அல்லது சட்டத்திற்கு உட்பட்டு அசையா சொத்துகளை வாங்கியவர் மற்றும் பத்து வருடங்களுக்கு குறையாமல் அம்மாநிலத்தில் குடியிருப்பவர்கள் காஷ்மீரின் பூர்வ குடிகள்” என்று வகுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் குழந்தைகள், அம்மாநிலத்திற்கு வெளியே ஒருவரை திருமணம் செய்துகொண்டால், அந்த குடும்பம் இந்த சிறப்பு அந்தஸ்தை இழக்கும். பெண் ஒருவர் ஜம்மு -காஷ்மீரை சேராத ஒருவரை திருமணம் செய்தால் அவரது உரிமையை இழக்கமாட்டார் என்று 2002ம் ஆண்டு ஜம்மு&காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த சட்டம் பூர்வகுடி அல்லாத மக்கள் யாரும் அம்மாநிலத்தில் நிலம் வாங்கவோ, நிரந்தரமாக குடியேறவோ, அரசு வேலைகளைப் பெறவோ அல்லது இதர சிறப்பு சலுகைகளைப் பெறவோ முடியாது என்று தடைசெய்துள்ளது. சட்டப்பிரிவு 35ஏ பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் 1954ம் ஆண்டு இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
சட்டப் பிரிவு 370 என்றால் என்ன?
சட்டப்பிரிவு 370 என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் “தற்காலிக ஏற்பாடான” சிறப்பு அந்தஸ்து மற்றும் தன்னாட்சி அமைப்பை ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்குகிறது.
இந்திய அரசியலமைப்பு XXI பிரிவின் படி, “தற்காலிகமான, இடைநிலை, சிறப்பு பகுதிகளான” ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகள் சட்டப்பிரிவு 370ன் கீழ் வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கீழ் வரும் அனைத்து பகுதிகளும் மற்ற மாநிலங்கள் பெறும் எந்த அந்தஸ்துகளையும் பெறாது. உதாரணமாக 1965ம் ஆண்டுவரை அம்மாநிலத்தில் சர்தர்-இ-ரியாஷத் எனப்படும் அமைப்பு இருந்தது. அந்த அமைப்பின்படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி இந்திய குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றபிறகு ஐந்து ஆண்டுகள் அம்மாநிலத்தை ஆட்சி செய்வார். மற்ற மாநிலங்களில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தேவையில்லை.
இந்த சிறப்புச் சட்டமானது, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் ஜம்மு&காஷ்மீர் மன்னர் ஹரிசிங் மஹாராஜா என்பவரால் நியமிக்கப்பட்ட அப்போதைய காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லா என்பவரால் 1947ல் தொடங்கிய இதற்கான பணிகள் 1954ல் முடிவடைந்தது.
ஷேக் அப்துல்லா 370 சட்டப்பிரிவானது அரசியலமைப்பின் தற்காலிகமான ஏற்பாட்டின் கீழ் இருக்கக்கூடாது என்றும் அது வலிமையான தன்னாட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த சட்டப்பிரிவின் படி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை, தொலை தொடர்புத்துறை மற்றும் நிதியமைச்சகம் தவிர மற்ற சட்டங்களை அம்மாநிலத்தில் அமல்படுத்த, இந்த பிரிவின் கீழ் வரும் மாநில அரசின் ஒப்புதல் தேவை. அம்மாநில மக்களுக்கு இரண்டு விதமான சட்டங்கள் உண்டு. அந்த மாநிலத்தின் பூர்வகுடி மக்களுக்கு உள்ள சட்டம் அம்மாநில மக்கள் அல்லாதவர்களுக்கு பொறுந்தாது. இந்த அரசியலமைப்புச் சட்டப்படி ஜம்மு- காஷ்மீர் பூர்வகுடி அல்லாத மற்ற இந்தியர்கள் அந்த மாநிலத்தில் நிலங்களையோ அல்லது வேறு பொருட்களையோ வாங்க முடியாது. நிதி அவசரநிலையை மத்திய அரசால் இந்த மாநிலத்தில் கொண்டு வர முடியாது. சட்டப்பிரிவு 360ன் படி வெளிப்புற ஆக்கிரமிப்பு அல்லது போர் சமயங்கள் தவிர மற்ற நேரங்களில் அவசர நிலையை பிரகடனபடுத்த முடியாது. மாநில அரசு கேட்டுக்கொண்டால் தவிர மற்ற நேரங்களில் மத்திய அரசால் அம்மாநிலத்தில் அவசர நிலையை கொண்டு வரமுடியாது.
இதன் மூலம் காஷ்மீர் முழுவதும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும். பாகிஸ்தான் காஷ்மீரை சொந்தம் கொண்டாட முடியாது. இதன் படி கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வந்த பாகிஸ்தான் - இந்திய எல்லைப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக விமர்கர்கள் கூறுகின்றனர்.