Video : முதல்வருக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்.. புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு

Sep 23, 2022, 4:34 PM IST

திருபுவனத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அங்காளன், இவர் தற்போது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவிற்கு ஆதரவளித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் ஆளும் அரசால் புறக்கணிக்கப்படுவதாக கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பேசி இருந்தார். ஆனால் இதுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு மக்கள் நலத்திட்ட பணிகளும் செயல்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று திருபுவனை தொகுதி சட்டமன்ற பாஜக ஆதரவு எம்.எல்.ஏ அங்காளன் தனது ஆதரவாளர்களுடன் புதுச்சேரி சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிக்கு எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்த கூடாது என்று ரங்கசாமி வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், மேலும் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது, மதுபான மற்றும் சாராயக்கடைகளுக்கு ஏலம் விட்டதில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது. இதன் மீது சிபிஐ விசாரணை வைக்க வேண்டும் என்றார்.

மேலும் புதுச்சேரியில் பாஜகவை ரங்கசாமி அழிக்க நினைப்பதாக  குற்றச்சாட்டிய அவர், உடனடியாக முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் எனவும், இது தொடர்பாக விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ரங்கசாமி மீது புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் புதுச்சேரியில் பாஜகவின் வளர்ச்சியை தடுக்காதே மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் தொகுதியை புறக்கணிக்காதே என்பன போன்ற பதாகைகளை கையில் ஏந்தி  சட்டசபை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர்  போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் அங்காளனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனைவரும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை ஆளுநர் மாளிகையில் சந்தித்து சுயேட்சை மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவது குறித்து புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முதலமைச்சரிடம் இது குறித்து பேசுவதாக உறுதியளித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து மீண்டும் சட்டமன்றத்துக்கு வந்த அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுயேட்சை எம்எல்ஏ அங்காளனுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சரிடம் பேசி விரைவில் தீர்க்கப்படும் என உறுதியளித்தனர். மேலும் போராட்டத்தை உடனே கை விடுமாறு கூறியதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் போராட்டத்தை கைவிட்டு திரும்பி சென்றார். இதற்கு முன்பு மற்றொரு பாஜக சட்டமன்ற உறுப்பினரான கல்யாணசுந்தரம் போராட்டத்தில் கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.