Watch : திருவனந்தபுரம் அருகே 20அடி ஆழ கிணற்றில் விழுந்த கரடி! 5 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் தீவிரம்!

Apr 20, 2023, 3:51 PM IST

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளனாடு பகுதியில், அரவிந்தன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று இரவு கரடி ஒன்று தவறி விழுந்துள்ளது. காலையில் கிணற்றில் கரடி ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக அவர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். முதலில் வனத்துறையினர் மேற்கொண்ட மீட்பு பணியில் எந்த பலனும் இல்லாததை தொடர்ந்து - கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி மீட்கலாம் என திட்டமிட்ட பின் திருவனந்தபுரம் மிருக காட்சி சாலையில் உள்ள மருத்துவரை அழைத்து கரடிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மயக்க நிலைக்கு சென்ற கரடியின் பாரம் தாங்காமல் கிணற்றுக்குள் கரடி மூழ்கவும் தொடங்கியுள்ளது. மேலும் கிணற்றில் உள்ள தண்ணீரை மின் மோட்டார்களை பயன்படுத்தி வெளியேற்றி வருகின்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கரடியை உயிருடன் காப்பாற்ற 5 மணி நேரத்திற்கு மேலாக வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.