மத்திய அரசால் தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக்-டாக் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைய முயற்சித்து வருகிறது.
இந்தியாவில் டிக்-டாக் செயலி எவ்வளவு பிரபலமாக இருந்தது என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை. இப்போது யூ-டியூப்பில் தவம் கிடக்கும் பலரும் ஒரு காலத்தில் டிக்-டாக்கே கதி என கிடந்தவர்கள் தான். பலரும் டிக்-டாக் மூலமாக தங்களுடைய உண்மையான திறமைகளை வெளிப்படுத்தினாலும், சிலர் அரைகுறை ஆடையில் ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனங்கள் போன்ற வீடியோக்களை வெளியிட்டதால் இந்திய கலாச்சாரம் சீரழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இந்த செயலியால் பிரபலமாகி சினிமா துறையில் நுழைந்தவர்களும் உண்டு. அதே டிக் டாக் வீடியோவுக்காக முயற்சி செய்து கவனக்குறைவால் உயிரை விட்டவர்களும் இங்குண்டு. இப்படி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான டிக் டாக்கை சீன செயலிகளின் பட்டியலோடு சேர்த்து மத்திய அரசு தடை செய்தது. அதன் பின்னர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூ-டியூப் உள்ளிட்ட தளங்களை டிக்-டாக் வாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கோடிக்கணக்கான இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததால் டிக்-டாக் செயலியை எப்படியாவது மறுபடியும் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் அதன் நிறுவனமான பைட் டான்ஸ் முயற்சித்து வருகிறது. இடையில் டிக் டாக்கின் போட்டி நிறுவனமான க்ளான்ஸ் (Glance) நிறுவனத்திடம் டிக் டாக்கை விற்பனை செய்ய முடிவு செய்து, அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூட தகவல்கள் வெளியாகின.
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் செயலி, இந்தியாவிற்கென பிரத்யேகமான செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதே யுக்தியை கையில் எடுத்துள்ள பைட் டான்ஸ் நிறுவனமும், டிக்-டாக்கை மீண்டும் இந்தியாவிற்குள் நுழைக்க முயற்சித்து வருகிறது. இதற்காக "Tick Tock" என்ற பெயரில் காப்புரிமை வேண்டி பைட் டான்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.