மோசடியான மாசுக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் வோல்க்ஸ்வாகன் இந்தியா கார் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மோசடியான மாசுக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் வோல்க்ஸ்வாகன் இந்தியா கார் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம், 2 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது.
பிரபல ஜெர்மன் கார் நிறுவனமான வோல்க்ஸ்வாகன், உலகம் முழுவதும் பிரபலமானதாகும். இந்தியாவில் லட்சக்கணக்கான கார்களை விற்பனை செய்துள்ள இந்த நிறுவனம், சர்வதேச அளவில், காற்று மாசுபாடு விதிகளை மீறியதாக கடந்த சில வருடங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. சோதனைகளின் போது, குறைந்த அளவு மாசுபாடு ஏற்படுத்துமாறு வோல்க்ஸ்வாகன் கார்கள் திருத்தி காண்பிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசு அந்நிறுவனத்தின் மீது 18 பில்லியன் டாலர்கள் அபராதம் விதித்தது. அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மார்ட்டின் வின்டர்கார்ன், வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்நிறுவனம், தனது கார்களில் மோசடியான மாசுக்கட்டுப்பாட்டு கருவியைப் பொருத்தியதால், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியேறி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்த விசாரிக்க பசுமை தீர்ப்பாயம் அமைத்த இரண்டு ஆய்வுக் குழுக்களும், புகாரை உறுதி செய்தன.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் மோசடியான மாசுக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்திய வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்திற்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த தொகையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் 2 மாதத்திற்குள் டெபாசிட் செய்ய உத்தரவிட்டார். இந்த குற்றச்சாட்டுகளை வோல்க்ஸ்வாகன் நிறுவனம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.