சுட்டெரிக்கும் வெயிலில் தலைக்கவசம் அணிந்து வியர்வையுடன் வாகனம் ஓட்டுவதற்கு தீர்வாக ஏ.சி. வசதியுடன் இயங்கும் ஹெல்மெட்டை உருவாக்கியுள்ள இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
வெயில் அனலாக கொதிக்கும் பகுதிகளில் வெப்பம் தகிக்கிறது. கோடை காலத்தில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வெயில் 100 டிகிரியை தாண்டி வதைக்கின்றன. பொதுமக்களுக்கு கடும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். வெயிலில் தலை காட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழலில் ஒருவேளை வெளியே சென்றால் டூ-வீலர் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் நிலை பரிதாபம் தான். அடிக்கும் வெயிலில் ஹெல்மெட்டுக்குள் தலையை திணித்துக் கொண்டு வியர்வை சொட்டச்சொட்ட மிகுந்த சிரமத்தை அனுபவிக்க வேண்டி இருக்கிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் இந்திய இளைஞர் ஒருவர் ஏசியால் இயங்கும் ஹெல்மெட்டை கண்டுப்பிடித்துள்ளார். கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த சந்தீப் இந்த ஹெல்மெட்டுடன் பொருத்திக் கொள்ளும் வகையில் ஏசி இயந்திரத்தை கண்டுப்பிடித்துள்ளார். சிறியளவில் அமைந்திருக்கும் இந்த இயந்திரம் சூடான காற்றையும் வெளியேற்றும் தன்மைக் கொண்டது.
நாட்டில் நிலவும் அனைத்து பருவநிலை மாறுதலின் போது இந்த ஹெல்மெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என சந்தீப் தெரிவித்துள்ளார். எனினும் கோடைக் காலத்தில் இந்த ஏசி ஹெல்மெட் அதிக பயனை அளிக்கும். தோள்பட்டையில் ஏசி இயந்திரத்தை மாட்டிக் கொள்ள வேண்டும். பிறகு பையில் இருந்து கிடைக்கும் குழாயை ஹெல்மெட்டுக்குள் விட வேண்டும். பையில் இருக்கும் இயந்திரத்தை இயக்கியவுடன், உடனே குழாய் வழியாக குளிர்ந்த காற்று ஹெல்மெட்டுக்குள் பரவும்.
ஏசி இயந்திரத்தின் மொத்த எடை 125 கிராம். ஹெல்மெட் மற்றும் தோள்பட்டை பையுடன் சேர்க்கும் போது அதிகப்பட்சமாக 1,800 கிராம் எடை வரும். எனினும், ஹெல்மெட்டின் மாடலுக்கு தகுந்தால் போல எடையில் மாறுபாடு இருக்கும். பேட்டரி திறனில் இயங்கும் இந்த ஏசிக்கு தோள்பட்டை பையில் தனியாக பிளக்-பாயின்ட் உள்ளது. அதிலுள்ள ஒரு சுவிட்ச்சில் தலைக்கு செல்லும் குளிர்ந்த காற்றின் அளவை கூட்டவும் குறைக்கவும் செய்யலாம்.
குளிர்ந்த பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு இந்த இயந்திரம் சூடான காற்றையும் வெளிப்படுத்தும். வாகன ஓட்டிகள் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் இடங்களுக்கு ஏற்றவாறு, குளிர்ந்த மற்றும் சூடான மோடுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த ஏசி இயந்திரம், பைக்கின் பேட்டரியின் மூலம் திறனை பெற்று இயங்கும். நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து, பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு இளைஞர் சந்தீப் இந்த ஏசி ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளார்.