ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், ரூ.3,200 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த தகவலை அந்நிறுவனமே வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2017-18ம் நிதியாண்டின் முடிவில், இந்த வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், ரூ.3,200 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த தகவலை அந்நிறுவனமே வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2017-18ம் நிதியாண்டின் முடிவில், இந்த வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒட்டுமொத்த சில்லறை வர்த்தகம் செய்யும், ஃபிளிப்கார்ட் இந்தியாவுக்கு ரூ.2000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் இருந்ததைவிட 750% சரிவாகும். இதேபோன்று, இந்நிறுவனத்தின், இணையதள வர்த்தகப் பிரிவுக்கு, ரூ.1,200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் இருந்ததைவிட, 30% சரிவாகும்.
நிறுவனத்தின் வர்த்தகம் நஷ்டத்தைச் சந்திக்க முக்கிய காரணம், அமெரிக்க போட்டி நிறுவனமான அமேசான் தனது வர்த்தகத்தை அசுர பலத்தில் விரிவுபடுத்தி வருவதே ஆகும். அமேசானின் வர்த்தக போட்டியை சமாளிக்க, ஃபிளிப்கார்ட் பலவித முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
இந்நிறுவனத்தை, அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், சமீபத்தில் வாங்க முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தங்களும் நிறைவடைந்து, நிறுவனத்தை வால்மார்ட் எடுத்து நடத்த தொடங்கியுள்ளது. ஆனால், தற்போது நஷ்டத்தில் உள்ள ஃபிளிப்கார்ட்டை, வால்மார்ட் நிர்வகிப்பது சிக்கலான வர்த்தக நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. ஃபிளிப்கார்ட்டுக்கு ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடி, 2020ம் ஆண்டு வரை தொடரும் என்றும் தெரிகிறது.
இதனால், வால்மார்ட் நிறுவனமும், நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது. இதுபற்றி, வால்மார்ட் தரப்பில் கூறும்போது, ‘’ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை, வால்மார்ட் முழுவதுமாக நிர்வகித்து வருகிறது. ஆன்லைன் சந்தையில் மந்தநிலை காணப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. வர்த்தகப் பணிகள் எதிர்பார்த்தபடியே உள்ளன. படிப்படியாக இதனை மேம்படுத்த தொடங்குவோம். வர்த்தகப் போட்டிகளை சிறப்புடன் சமாளிப்போம். வரும் நாட்களில், வால்மார்ட்டின் வர்த்தக திட்டங்கள் நல்ல பலன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம் , என்று குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம், உள்நாட்டில் ஃபிளிப்கார்ட்டின் வருமானம் அதிகரித்தே காணப்படுகிறது. இருந்தாலும், ஒட்டுமொத்த வர்த்தகப் பணிகள் எதிர்பார்த்தபடி, இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில், ஊழியர் நலனுக்காக, 330 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஃபிளிப்கார்ட் கூறியுள்ளது.