தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலில் பராக் அகர்வால் தெரிவித்ததற்கு முற்றிலும் முரணான கருத்துக்கள் இடம்பெற்று இருக்கின்றன.
டுவிட்டர் நிறுவனத்தை டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களை கொடுத்து வாங்கியதில் இருந்து, டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் வேலை இழப்போமா என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுபற்றியும், டுவிட்டர் எதிர்காலம் பற்றியும் பலர் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வாலிடம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பணி நீக்கத்தை பொருத்தவரை இதுவரை அவ்வாறு எந்த திட்டமும் இல்லை என பராக் அகர்வால் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலில் பராக் அகர்வால் தெரிவித்ததற்கு முற்றிலும் முரணான கருத்துக்கள் இடம்பெற்று இருக்கின்றன.
எலான் மஸ்க் அதிரடி:
அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி பதவிக்குப ஏற்கனவே வேறு ஒரு நபரை எலான் மஸ்க் தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது. புதிய நபர் இந்த ஆண்டு வாக்கில் 44 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான விற்பனை நடைமுறைகள் நிறைவு பெற்றதும் பொறுப்பேற்றுக் கொள்வார் என கூறப்படுகிறது. முன்னதாக டுவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகத்தில் தனக்கு துளியும் நம்பிக்கை இல்லை என எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இதன் மூலம் நிர்வாக அதிகாரிகள் மாற்றப்படலாம் என எலான் மஸ்க் ஏற்கனவே சூசகமாக தெரிவித்து விட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் பராக் அகர்வால் டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். எலான் மஸ்கிற்கு டுவிட்டர் நிறுவனம் முழுமையாக கைமாறும் வரை பராக் அகர்வால் டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சி.இ.ஓ?
பராக் அகர்வாலுக்கு மாற்றாக டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக யார் பொறுப்பேற்க போகிறார் என்ற கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளிக்க மறுத்துவிட்டார். டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று 12 மாதங்களுக்குள் பணி நீக்கம் செய்யப்பட்டால், பராக் அகர்வாலுக்கு எலான் மஸ்க் 43 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டி இருக்கும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன.
பராக் அகர்வால் மட்டும் இன்றி டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை சட்ட வல்லுநர் விஜயா கட்டேவையும் பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் பணி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் 12.5 மில்லியன் டாலர்களை பெறுவார் என கூறப்படுகிறது. இவரின் ஆண்டு வருமானம் தற்போது 17 மில்லியன் டாலர்கள் ஆகும். மேலும் டுவிட்டர் நிறுவனத்தில் அதிக வருவாய் ஈட்டுவோரில் விஜயா கட்டேவும் ஒருவர் ஆவார்.
டுவிட்டர் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்து, நிர்வாக அதிகாரிகளின் சம்பளத்தை குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் கடந்த ஆண்டு 17 மில்லியன் டாலர்களை சம்பளமாக பெற்றுக் கொண்ட விஜயா கட்டே பணி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுறது. கடந்த வாரம் டுவிட்டரின் எதிர்காலம் பற்றி ஊழியர்களிடம் பேசும் போது விஜயா கட்டே கண்ணீர் விட்டு அழுதார்.