வாட்ஸ்அப்பில் செயலியைப் பயன்படுத்தும் சுமார் 50 கோடி பயனர்களின் எண்களை திருடி ஹேக்கர்களிடம் விற்பனை செய்வதாக அதிர்ச்சி செய்திகள் வந்துள்ளன.
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இந்த இரண்டு தளங்களிலும் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். ஏற்கெனவே, ஃபேஸ்புக்கில் பயனர்களின் விவரங்கள் திருடப்படுவதாக குற்ற்ச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதற்கு முன்பு கடந்தாண்டு இந்தியா உட்பட 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 53 கோடியே 30 லட்சத்து ஃபேஸ்புக் பயனர்களின் செல்போன் நம்பர்கள், தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வாட்ஸஅப் பயனர்களின் எண்களை திருடி விற்பதாக ஃசைபர் கிரைம் செய்தி தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த 2022 ஆண்டில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா என 84 நாடுகளில், சுமார் 48 கோடி 70 லட்சம் வாட்ஸ்அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றில் இந்தியாவில் இருந்து மட்டும் 60 லட்சம் வாட்ஸ்அப் பயனர்கள் எண்கள் திருடப்பட்டுள்ளன. இதே போல், அமெரிக்காவில் 3.2 கோடி, இங்கிலாந்தில் 1.1 கோடி, ரஷ்யாவில் 1 கோடி, எகிப்து 2 கோடி, இத்தாலி 3.5 கோடி, பிரான்ஸ் 2 கோடி, துருக்கியே 2 கோடி, சவூதி அரேபியா 2.9 கோடி என கோடிக்கணக்கிலான பயனர்களின் எண்கள் திருடப்பட்டுள்ளன.
எச்சரிக்கை: FIFA 2022 கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்கு 25ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறதா?
அவ்வாறு திருடப்பட்ட எண்கள் 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விலை என்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க நாட்டைச் சார்ந்தவர்களின் எண்ககளை 7ஆயிரம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், இங்கிலாந்து எண்களை 2,500 டாலர்களுக்கும், ஜெர்மனி எண்களை 2,000 டாலர்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த எண்களை வைத்து ஹேக்கர்கள் பயனர்களின் போன்களை ஹேக் செய்வதற்கும், ஃபிஷிங் மெசேஜ்கள் அனுப்புவதற்கும், மோசடி செய்வதற்கும் பயன்படுத்தப்படலாம். ஏற்கெனவே, தற்போதைய சூழலில் இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, முன்பின் தெரியாத எண்களிடம் இருந்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்தால், அவற்றை நம்பி பதிலளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அவை ஹேக்கிங் மெசேஜ்களாக இருக்கலாம். மேலும், முடிந்த வரையில் வாட்ஸ்அப்பில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆன் செய்வது நலம்.