Tamil Nadu woman Pechiyammal: இருபது வயதில் கணவரை இழந்த பேச்சியம்மாள், தனது ஒரே செல்ல மகளை வளர்ப்பதற்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார். இவர் தனது வாழ்க்கையில் திரைப்படங்களை மிஞ்சிய கஷ்டங்களை அனுபவித்து உள்ளார்.
இருபது வயதில் கணவரை இழந்த பேச்சியம்மாள், தனது ஒரே செல்ல மகளை வளர்ப்பதற்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார். இவர் தனது வாழ்க்கையில் திரைப்படங்களை மிஞ்சிய கஷ்டங்களை அனுபவித்து உள்ளார்.
திரைப்படங்களை மிஞ்சிய போராட்டம்:
''முப்பொழுதும் உன் கற்பனை'' என்கின்ற படத்தில் வரும் கண்கள் நீயே..காற்றும் நீயே என்ற வரிகள் கேட்பவர் அனைவரையும் உருக்கி விடும். இந்த படத்தில், பாலியல் தொல்லை அதிகரிக்க தன்னுடைய மகனை வளர்ப்பதற்காக, இளம் வயது விதவை தாய் தலையில் மொட்டை போட்டு கொள்வார். இந்த படத்தில் மகனாக அதர்வா நடித்திருப்பார். தற்போது, பேச்சியம்மாள் வாழ்கை கதை அந்த திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு உள்ளது.
பேச்சியம்மாள் என்ற முத்துமாஸ்டர்:
தூத்துக்குடி மாவட்டம், சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். பெண்ணான இவரை ஆண் என எண்ணிய மக்கள் இவரை முத்து மாஸ்டர், அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கின்றனர். இவரின் போராட்ட கதைதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
20வது வயதில் திருமணம், 15 நாட்களில் விதவை:
பேச்சியம்மாள், தன்னுடைய 20வது வயதில், அதே பகுதியை சேர்ந்த சிவா பிள்ளை, என்பவரை பெரியோர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டார். திருமணமான 15 நாட்களுக்குள் கணவரை இழந்த பேச்சியம்மாள், தன்னுடைய வயிற்றில் உண்டான கருவை நினைத்து மறுமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளார். பெண் பிள்ளையை பெற்றெடுத்த பேச்சியம்மாளுக்கு நாளடைவில், ஆண்கள் வட்டம் சூழ்ந்து கொண்டு பல்வேறு பாலியல் தொல்லை அதிகரிக்க, தன்னுடைய பிள்ளைக்காக ஆண் வேடம் தரித்து வேலைகளை கவனிக்க தொடங்கியுள்ளார்.
ஆணாக மாறிய பேச்சியம்மாள்:
வறுமையின் காரணமாக பல ஊர்களுக்குச் சென்று தொழில் செய்து வந்த பேச்சியம்மாள் முடியை குறைவாக வெட்டி, வேட்டி, சட்டை அணிந்து கொண்டு தன்னை முத்து என்றே அடையாளம் படுத்தி கொண்டுள்ளார். எந்த மகளுக்காக ஆண்வேடம் தரித்தாரோ, அந்த மகளுக்கு திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார். இருப்பினும், பேச்சியம்மாள், தன்னுடைய தோற்றத்தை மாற்றாமல் தூத்துக்குடி மாவட்டம் பகுதியில் முத்து மாஸ்டராக வலம் வருகிறார்.
30 வருடங்களுக்கு மேலாக தொடரும் பயணம்..
தன்னுடைய 57 வயதிலும் ஆண்களுக்கு எவ்விதத்திலும் குறைந்து விடாமல், பேச்சியம்மாள், 100 நாள் வேலை, பெயிண்ட் அடிப்பது, தேங்காய் கடை, டீக்கடை, பரோட்டா கடை போன்றவற்றில் வேலை பார்த்து கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தன்னை ஆணாகவே அடையாளப்படுத்தி கொண்டுள்ளார்.
அரசாங்கத்திடன் பேச்சியம்மாளின் கோரிக்கை:
தற்போது பேச்சியம்மாள் அரசாங்கத்திடன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். கணவர் இறந்தபோது இறப்புச் சான்று வாங்காத நிலையில், ஆதார் அட்டையில் முத்து என்ற ஆண் பெயரே இருப்பதால் விதவை நிதி உதவி, முதியோர் ஓய்வூதியத்தொகை எதுவும் தனக்கு கிடைக்கவில்லை. எனவே, அரசாங்கம் தனது வறுமையையும் வயதையும் கருத்தில் கொண்டு, உதவ முன்வர வேண்டும் என்கிறார்.