
உயர்கல்வியிலும் ஆராய்ச்சிக் கல்வியிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் சிறந்ததாக தமிழகம் மாற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுக்குறித்து காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இதுவரை முதலமைச்சராக இருந்த நீதிகட்சி தலைவர்களான காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் தொடங்கி தொடர்ந்து வந்த முதலமைச்சர்கள் அனைவரும் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கினர். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வியை சென்று சேர்க்க வேண்டும் என எண்ணினர். 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கலைஞர், தமிழ்நாட்டை உயர்கல்வியில் முன்னேறிய மாநிலம் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் புதிய கல்லூரிகளை தொடங்கினார். பல பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்தார். இவை அனைத்துக்கும் மேலாக, தொழிற்கல்விப் படிப்புகள் அனைவருக்கும் தடையாக இருந்த நுழைவுத்தேர்வு முறையை நீக்கினார். ஆனால் இன்று நீட் என்ற பெயரில் தகுதி என்ற தடையை போடுகிறார்கள். அதனால் தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம். அந்த தடையும் தூக்கி எறியப்படும். முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்ததும் தமிழ்நாடு தான். கொரோனா ஊரடங்குக் காலத்தில் ஏற்பட்ட கல்வி இழப்பை ஈடு செய்ய இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை உருவாக்கினோம். இதனை பொருளாதார வல்லுநரான ழான் திரேஸ், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் செயல்படுத்த அம்மாநில அரசுக்குப் பரிந்துரை செய்தார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அகன்ற அலைவரிசை வசதி ஏற்படுத்தப்படுகிறது.
நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்களின் வழிகாட்டுதலுடன் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிகளும், மாணவர்களுக்கான மென்திறன் பயிற்சிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி அறிவில் சிறந்த மாணவர்கள் என்பதோடு, அவர்களுடைய திறன் மேம்பாடு அடைய, கடந்த மார்ச் 1 ஆம் தேதி நான் முதல்வன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற பெருமை மட்டும் நமக்குப் போதாது. உயர்கல்வியிலும் ஆராய்ச்சிக் கல்வியிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் சிறந்த தமிழ்நாடாக நாம் மாற வேண்டும். எந்தக் கல்வி நிறுவனத்துக்குச் சென்றாலும் நான் இதைத்தான் வலியுறுத்தி வருகிறேன். அந்நிலையை எய்த, கல்வி யாருக்கும் மறுக்கப்படக் கூடாது. சாதி, ஊர், பின்புலம், பணம், மதம், உடை, பாலினம் எதுவும் ஒரு மாணவரின் கல்விக்குத் தடையாக அமைந்திடக் கூடாது. அத்தகைய சமூகத்தைப் படைக்கத்தான் போராடி வருகிறோம் என்று தெரிவித்தார்.