Latest Videos

ஜூன் 4க்கு பிறகு கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பீங்க.. உணவு தர தயாராக இருக்கோம்- செல்வப்பெருந்தகை கிண்டல்

By Ajmal KhanFirst Published May 23, 2024, 3:29 PM IST
Highlights

 கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழ்நாடு எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது பற்றியும், மோடி ஆட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் பற்றியும் புத்தகம் வழங்கத் தயாராக இருக்கிறோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

'தமிழர்களை விமர்சிக்கும் மோடி'

பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் கட்சி தமிழக பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை கிண்டல் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசா மாநிலம் புரி ஸ்ரீகெஜந்நாதர் ஆலய கருவூலத்தின் சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களையும் திருடர்கள் என்று இழிவுபடுத்தும் செயலாகும். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சால் ஒட்டுமொத்த தமிழர்களும் அவருக்கு எதிராக கடும் கோபத்தில், கொந்தளிப்பில் உள்ளனர். 

Jawahirullah : தேர்தலில் மோடி தோற்றால் அதற்கும் தமிழர்கள் மீது பழி சுமத்தினாலும் ஆச்சரியமில்லை- ஜவாஹிருல்லா

காங்கிரஸ் போட்டம்- அண்ணாமலை கிண்டல்

மோடியின் தமிழர் விரோதப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தேன்.  ஜனநாயகத்தின் மீது முற்றிலும் நம்பிக்கை இல்லாத கட்சியான பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் இந்தப் போராட்ட அறிவிப்பை கிண்டலடித்திருக்கிறார். முற்றுகைப் போராட்டத்திற்கு வரும் 10 பேருக்கு உணவு தயார் செய்து வைப்பதாக கூறியிருக்கிறார்.  வரும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை. ஏனெனில், கடந்த 2004ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை இழந்த பிறகு 2014 வரை கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கவில்லை. 

பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை

பல ஆண்டுகளுக்கு அந்த அலுவலகத்தில் அப்போது மாநில அமைப்பு பொதுச் செயலாளராக இருந்த மோகன்ராஜுலு மட்டுமே இருந்தார்.  இந்த வரலாற்றை எல்லாம் அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உணவு ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம். அதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழ்நாடு எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது பற்றியும், மோடி ஆட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் பற்றியும் புத்தகம் வழங்கத் தயாராக இருக்கிறோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதற்காக தான் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவரை கொன்றோம்! காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேர் பகீர்!

click me!