ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற கஞ்சா ஆயில் போதை பொருளை இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற கஞ்சா ஆயில் போதை பொருளை இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4 நாட்களுக்கு முன்பு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.50 கோடி மதிப்பிலான மெட்டாபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மண்டபம் கடல் பகுதியில் ரூ.108 கோடி மதிப்பிலான 99 கிலோ கஞ்சா ஆயில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அதிகாலை நாட்டு படகின் மூலம் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி செல்ல இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் இந்திய கடலோர காவல்படை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் மண்டபம் கடல் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாம்பன் புயல் காப்பகம் பகுதியை சேர்ந்த ரெபிஸ்டன் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகு இலங்கை நோக்கி சென்றுள்ளது. அந்த படகை நிறுத்தி விசாரித்த போது படகில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கடலோர காவல்படையினர் படகை சோதனை செய்த போது அதில் 111 பாக்கெட்களில் கஞ்சா ஆயில் போதை பொருள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் போதை பொருளை பறிமுதல் செய்து, படகில் இருந்த 3 பேரை கைது செய்து அழைத்து செய்ன்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அவர்கள் பாம்பன் பகுதியை சேர்ந்த ரெமிஸ், பிரதாப், ஜான்சன் என்பது தெரியவந்தது.
மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ கஞ்சா ஆயில் என்பது ஒரு போதை பொருள். கஞ்சா செடியை வேகவைத்து அதிலிருந்து வடிகட்டி கஞ்சா ஆயில் எடுக்கப்படுகிறது. 100 கிலோ கஞ்சா செடியை வேகவைத்தால் 900 கிராம் கஞ்சா ஆயில் கிடைக்கும்.. இந்த எண்ணெயை இந்தோனேசியா போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர். விலை உயர்ந்த போதை பொருளான இந்த கஞ்சா ஆயில் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
கஞ்சா ஆயில் மூன்று ரகங்களாக தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. மண்டபம் கடலில் பிடிக்கப்பட்ட கஞ்சா ஆயில் முதல் ரகத்தை சேர்ந்தது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் 99 கிலோ கஞ்சா ஆயில் பிடிபட்டது இதுவே முதல்முறை. இதன் சர்வதேச மதிப்பு ரூ.108 கோடி வரை இருக்கலாம். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.