
2 வாரங்களுக்கு மேல் தொடர் சளி, காய்ச்சல் இருந்தால் காசநோய் அறிகுறியாக இருக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கோரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளா, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, சீனாவில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது. இதனிடையே 2 வாரங்களுக்கு மேல் தொடர் சளி, காய்ச்சல் இருந்தால் காசநோய் அறிகுறியாக இருக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், தமிழகத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் காசநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையையும் இறப்பவர்களின் எண்ணிக்கையையும் பூஜ்ஜியமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காசநோய் முழுமையாக குணப்படுத்தக் கூடிய நோய் என்பதை அனைவரும் உணர்தல் அவசியம். கொரோனா வைரஸ் தொற்று குறித்து சமூகப் பார்வை கூட மாறிவிட்டது.
தமிழகத்தில் 2015 ஆம் ஆண்டில் 1 லட்சம் பேரில் 217 பேருக்கு கண்டறியப்பட்ட காசநோய், 2020 ல் 142 ஆக குறைந்தது. அதனை, 2023 இல் 77 ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் 2030 ஆம் ஆண்டில் தான் காசநோய் இல்லாத நிலையை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு மேல் தொடர் சளி, காய்ச்சல் இருந்தால் காசநோய் அறிகுறியாக இருக்கலாம் எனக் கருதி அரசிடம் உள்ள இலவச பரிசோதனை வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நோயை குணப்படுத்துவதற்கான மாத்திரைகள் அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசம். ஆரம்ப கட்டத்திலேயே காசநோயை குணப்படுத்தவில்லை என்றால் செலவும் நோயின் தீவிரமும் பெருகி, உடலுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் உணர வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.