எமர்ஜென்சிக்கு கூட காசை எடுத்துக்கொண்டு போக முடியல! தேர்தல் பறக்கும் படையினரின் தொல்லையால் மக்கள் அவதி!யுவராஜா

By vinoth kumarFirst Published Mar 21, 2024, 11:08 AM IST
Highlights

அரசியல் கட்சிகளையும், வேட்பாளர்களையும் முறைப்படுத்துதல் என்ற பெயரில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடமிருந்து பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்வது முறையான நடவடிக்கை அல்ல.

தேர்தல் ஆணையம் ரூபாய் 50,000 என்ற வரைமுறையை மாற்றி குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயாவது ரொக்க பணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என யுவராஜா வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பறக்கும் படையினர் பொதுமக்களின் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்கின்றனர். அப்போது வாகனத்தில் உள்ள பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச்செல்லும் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

Latest Videos

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பறக்கும் படை, நிலையாணைக் குழு, கண்காணிப்புக் குழு என பல்வேறு குழுக்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடுத்தி வருகின்றனர். அவர்களோ, வாகனங்களை சோதனை செய்கிறோம் என்ற பெயரில் குடும்பத்தோடு செல்பவர்கள், கோயிலுக்குச் செல்பவர்கள், திருமணத்திற்காக மண்டபத்திற்கு பணம் செலுத்த செல்வோர், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப எடுத்துச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து வருகின்றனர்.

அரசியல் கட்சிகளையும், வேட்பாளர்களையும் முறைப்படுத்துதல் என்ற பெயரில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடமிருந்து பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்வது முறையான நடவடிக்கை அல்ல. தனிநபர் அல்லது வணிகர்கள் தொழில் நிமித்தமாக பணம் எடுத்துச் செல்வது வழக்கம். வங்கிகளில் பணம் எடுத்தாலும் அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் பழக்கம் நடைமுறையில் இல்லாத ஒன்றாகும்.

மேலும் பத்திர பதிவு செய்யும்போதுகூட பத்திரப் பதிவு அலுவலகத்தில் பணத்தைக் கொடுத்த பிறகுதான் பதிவு செய்யப்படுகிறது. முக்கியமாக சிறு வணிகர்கள் உடனடியாக பணம் கொடுத்து பொருட்களை வாங்கும் போது தான் பொருட்களின் விலையில் கணிசமான தள்ளுபடியும் கிடைக்கிறது. கரோனா ஊரடங்குக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் முற்றிலுமாக சிதைந்து போய் தற்போது தான் சிறிது சிறிதாக ஏற்றம் கண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறையின் காரணமாக மீண்டும் பொருளாதாரம் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தேர்தல் ஆணையம் ரூபாய் 50,000 என்ற வரைமுறையை மாற்றி குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயாவது ரொக்க பணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் இருப்பின் உடனடியாக பணத்தை பறிமுதல் செய்யாமல் அவர்களின் முழு தகவல் மற்றும் அவர்களின் அடையாள அட்டை நகல் பெற்று தேர்தல் அலுவலர் வசம் தெரியப்படுத்தி அதன் உண்மை நிலையை அறிந்த பிறகு நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும். எனவே, பொதுமக்கள் சுதந்திரமாக பணம், பொருட்களுடன் செல்வதற்கு பறக்கும் படையினர் இடையூறு செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென த.மா.கா இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

click me!