OPS : தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆவின் நிறுவனமே இப்படி செய்யலாமா.? ஓபிஎஸ் ஆவேசம்

By Ajmal KhanFirst Published May 29, 2024, 1:12 PM IST
Highlights

மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, ஆவினுக்கு வருமானம் வந்தால்போதும் என்ற நிலையில் ஆவின் நிறுவனம் செயல்படுவது மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது என ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். 

தரமற்ற உணவுப்பொருட்கள்

ஆவினில் காலவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில், இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  காலாவதியான பொருட்களை உட்கொள்வதன்மூலம் வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுவதுடன், வியாதிகளும் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவேதான், உணவகம், மருந்தகம், மளிகைக் கடை, இனிப்பகம், பாலகம் போன்றவற்றில் தரமான உணவு வழங்கப்படுகிறதா, காலாவதியாகாத பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அரசு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். ஆனால், இந்த நடைமுறையை தி.மு.க. அரசு பின்பற்றுவதாகத் தெரியவில்லை. இதன் காரணமாக தரமற்ற உணவுப் பொருட்களை உட்கொள்ளும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Latest Videos

இந்த நிலையில், பால் விலை உயர்வு, பால் பொருட்களின் விலை உயர்வு, தரமற்ற பால் விநியோகம், எடைக் குறைவு, பால் பொருட்கள் தட்டுப்பாடு என மக்களைப் பல தொல்லைகளுக்கு ஆளாக்கி வரும் ஆவின் நிறுவனம், தற்போது காலாவதியான பால் பொருட்களை விற்பனை செய்வதாக செய்தி' வந்துள்ளது பேரதிர்ச்சியை அளிக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமே, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

Rajinikanth : மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரா.? இமயமலை செல்லும் முன் ரஜினி கொடுத்த பரபரப்பு பேட்டி

மக்கள் மீது அக்கறை இல்லை

இது வேலியே பயிரை மேய்வதற்குச் சமம்.ஆவின் பாலகங்கள் கேட்கும் பால் பொருட்களை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்வதில்லை என்றும், குறைந்த அளவில் விற்பனையாகும் தயிர், நூடுல்ஸ், இனிப்பு வகைகள், பிஸ்கெட்டுகள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகின்றன என்றும், இவற்றை கட்டாயம் வாங்க வேண்டும் என்று ஆவின் பாலகங்களை ஆவின் நிறுவனம் வற்புறுத்துகிறது என்றும்,

 இந்தப் பொருட்கள் அனைத்தும் காலாவதி காலம் நெருங்கும் நேரத்தில் விநியோகிக்கப்படுகின்றன என்றும் பால் முகவர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், ஆவின் நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவுக்கும், விற்பனைப் பிரிவுக்கும் ஒருங்கிணைப்பு இல்லாததே என்று சொன்னால் அது மிகையாகாது. இது மட்டுமல்லாமல், மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, ஆவினுக்கு வருமானம் வந்தால்போதும் என்ற நிலையில் ஆவின் நிறுவனம் செயல்படுவது மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. திறமையற்ற அரசு தி.மு.க. அரசு என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டுத் தேவையில்லை. தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால் பாதிக்கப்படுவது பொதுமக்களும், பாலகங்களும்தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

காலாவதியான பொருட்கள்

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, பொதுமக்களின் நலன் காக்கும் வகையில், காலாவதி நிலையில் இருக்கும் பால் பொருட்களை ஆவின் பாலகங்கள் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதை தடுக்கவும், இனி வருங்காலங்களில் காலாவதியான பால் பொருட்கள் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படாது என்கிற உத்தரவாதத்தை வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

மோடியின் தியான நாடகம்.!! தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே அவமானம்- சீறும் செல்வப் பெருந்தகை
 

click me!