டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது என முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்
கர்நாடக சங்கீத வரலாற்றில் புதுப்பாதை வகுத்து செயல்படுவர் இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. மனித சமுக மேன்மைக்கும், நல்லிணக்க சூழல் நிலைத்து நீடிக்கவும் கர்நாடக இசைத் துறையில் முற்போக்கு சிந்தனையை விதைத்து வரும் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடமி சார்பில் 2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக இசைத் துறையில் அவர் ஆற்றியுள்ள பணிகளுக்காகவும், கர்நாடக இசையைப் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலமும், இறுக்கமாக வரையறுக்கப்பட்ட கட்டமைப்புகளுக்கு மாறாக அதன் ஆய்வில் கவனம் செலுத்துவதன் மூலமும் கலையின் கேட்போர் தளத்தை விரிவுபடுத்துவதற்கு அவர் பணியாற்றியமைக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு கருவியாக இசையைப் பயன்படுத்துவதற்காகவும் இவ்விருது வழங்கப்படுவதாக சென்னை மியூசிக் அகாடமி தெரிவித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் மியூசிக் அகாடமி இத்தகைய விருதுகளை அறிவிப்பதும், அவ்வமைப்பின் உயரிய விருதான சங்கீத கலாநிதி பெறுபவரை அவ்வாண்டின் இறுதியில் நடக்கும் இசை விழாவுக்குத் தலைமையேற்கச் செய்வதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகும். அவ்வகையில் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 15 தொடங்கி 2025 ஜனவரி 1 வரை நடைபெறும் விழாவிற்கு டி.எம்.கிருஷ்ணா தலைமையேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இசைக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் உள்ளிட்ட பலர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தந்தை பெரியாரின் முற்போக்கு கருத்துக்களை டி.எம்.கிருஷ்ணா பேசுவதும் இந்த எதிப்புக்கு காரணம்.
“பெரியார் போன்ற ஒருவரை அவர் புகழ்ந்து பேசியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் அப்படி பேசியிருப்பது மிகவும் ஆபத்தானது.” என ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், டி.எம்.கிருஷ்ணாவுக்கான ஆதரவு தமிழகத்தில் பெருகி வருகிறது. ஏராளமானோர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது என முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ துப்பாக்கிச்சூடுக்கு பிரதமர் மோடி கண்டனம்!
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.
சிறந்த பாடகர் அவர்கள் -இன் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து…
இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.
கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.
டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை.” என பதிவிட்டுள்ளார்.