மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலாதேவி விவகாரம் ஓயாத நிலையில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலாதேவி விவகாரம் ஓயாத நிலையில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரில் நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முழுநேர ஆராய்ச்சி மாணவியாக உள்ளேன். ஒன்றரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். எனக்கு வழிகாட்டி மற்றும் மேற்பார்வையாளராக துறைத்தலைவர் கர்ணமகாராஜன் நியமிக்கப்பட்டார். படிப்பில் சேர பல மாதங்கள் காலதாமதம் செய்ததால் 2 லட்சம் கொடுத்தேன். உரிய ஆய்வுப்பணிகளை முறையாக செய்து வருகிறேன். அவர் தனது அறையிலேயே இருக்கை தந்து அமரவைத்தார். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூசகமாக தன் காம இச்சையை தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வந்தார்.
படிப்பை விட்டு விட்டு ஊருக்கே போகலாமா என்ற அளவில் டார்ச்சருக்கு ஆளானேன். கடந்த நவம்பரில் கேரள பல்கலை.யில் என் ஆராய்ச்சி படிப்பிற்கான தகவல் சேகரிப்பிற்கு ஒரு மாதம் அனுமதி கேட்டதற்கு முதலில் மறுத்தார். பல்வேறு முயற்சிக்கு பிறகு சம்மதித்தார். தனியாக பேச வேண்டும். ரயில் நிலையத்தில் இறக்கி விடுகிறேன் என்று நெருங்கினார்.
பயந்து போன நான், கடந்த நவம்பர் 2-ம் தேதி அவரிடம் தெரிவிக்காமல் சொந்த ஊருக்கு கிளம்பி விட்டேன். மாலை 4 மணிக்கு அவர் போன் செய்தும் எடுக்கவில்லை. எஸ்எம்எஸ், வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி தொடர்ந்து ‘ஆப்சென்ட்’ போடுவதாக மிரட்டினார். ஒரு மாதம் தகவல் சேகரிப்பு பணி முடிந்து திரும்பியபோது, எனக்கு ஒரு மெமோ கொடுத்து விரட்டி விட்டார். ‘என் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்’ என்றேன். அதற்கு, ‘உன் எதிர்காலம் நீ என்னிடம் நடந்து கொள்வதில்தான் இருக்கிறது’ எனக்கூறி என் கையைப் பிடித்தார். நான் அதிர்ச்சி அடைந்தேன். கதறி அழுதேன். அதை தனது மொபைல் போனில் கர்ணமகாராஜன் வீடியோ எடுத்து ரசித்தார்.
பெல் அடித்து ஆபீஸ் ஊழியர்களை வரவழைத்து என்னை அலுவலகத்திலிருந்து விரட்டியடித்தார். மன அழுத்தத்தினால் விடுதி வாசலில் மயங்கி கீழே விழுந்தேன். என்னை பல்கலை. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர் பாலியல் தொல்லை தந்து, மனஉளைச்சலை கொடுத்த துறைத்தலைவர் கர்ணமகாராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். புகார் தெரிவித்துள்ள மாணவிக்கு, திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆதாரங்கள் உள்ளதாக அந்த மாணவி பரபரப்பு தகவலை கூறியுள்ளார். பாலியல் புகாரில் மதுரை காமராஜர் பல்கலைகழகம் 2-வது முறையாக சிக்குவது குறிப்பிடத்தக்கது.