கொள்ளிடத்தில் மணல் குவாரி..!! பதில் அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 2, 2019, 6:09 PM IST
Highlights

இந்த நடைமுறை தொடர்ந்தால் காவிரி, கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் உள்ள 5 பாலங்களும் உடைந்து மிகப் பெரும் சேதம் ஏற்படும். அதோடு கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் நீர்மட்டம் முற்றிலுமாக இல்லாமல்போய், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும். 

கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் மணல் குவாரி நடத்த தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக பொதுப்பணித்துறை செயலர், தஞ்சை, திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  திருச்சி லால்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," கொள்ளிடம் ஆறு விவசாய மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. திருச்சி, தஞ்சை, நாகை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கு ஆதாரமாக திகழ்வதோடு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. 

சுமார் ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரமாக காவிரி ஆற்றின் கிளை ஆறான கொள்ளிடம் ஆறு திகழ்கிறது. 2018 ஆம் ஆண்டு முக்கொம்பு மற்றும் கொள்ளிடம் ஆற்று பாலங்கள் சேதமடைந்தன. இதற்கு முக்கிய காரணம் காவிரி, கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் நடைபெற்ற மணல் குவாரிகளே ஆகும். பாலங்களில் சேதம் ஏற்பட்ட போது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும் அந்தப் பகுதிகளில் மணல் குவாரிகளை முறைப்படுத்த நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதும் மணல் குவாரிகள் நடைபெற்று வருகின்றன, அதற்கான சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றும் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் மணல் குவாரி நடத்த அவசியம் என்ன? என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது பொதுப்பணித்துறையின் செயல் பொறியாளர் தரப்பில் அதற்கான பதில் தங்களுடைய கோப்பில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நடைமுறை தொடர்ந்தால் காவிரி, கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் உள்ள 5 பாலங்களும் உடைந்து மிகப் பெரும் சேதம் ஏற்படும். அதோடு கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் நீர்மட்டம் முற்றிலுமாக இல்லாமல்போய், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு தஞ்சை, திருச்சி மாவட்ட கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் மணல் குவாரி நடத்த தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலர், தஞ்சை, திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

click me!