தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவு... மின்னணு இயந்திரங்களுக்கு சீல்!!

Published : Feb 19, 2022, 06:26 PM IST
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவு... மின்னணு இயந்திரங்களுக்கு சீல்!!

சுருக்கம்

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதை அடுத்து வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதை அடுத்து வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 488 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,823 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு இன்று (19ம் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 12,607 பதவிகளுக்கு 57,778 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து தயார் நிலையில் வைத்திருந்தது. அதன்படி, இன்று சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும், பொதுமக்கள் காலை 6 மணியில் இருந்தே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர்.

அதேபோன்று, அரசியல் கட்சி தலைவர்களும் காலையிலேயே வாக்களிக்க ஆர்வம் காட்டினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். அதேபோன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் வாக்களித்தார். திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எஸ்ஐஇடி கல்லூரியிலும், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனம் ராமதாஸ், இளைஞர் அணி செயலாளர் அன்புமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும், நடிகர், நடிகைகளும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் காலையிலேயே வாக்களித்தனர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் வகையில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், ஊர்காவல் படை வீரர்களும் அடங்குவார்கள். தமிழகத்தில் 5,960 பதட்டமான வாக்குப்பதிவு மையங்களில் ரகசிய கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளதுடன், அதிரடி படையினர் உள்ளிட்ட கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். மற்ற வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ மூலம் படம் எடுக்கப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. வரிசையில் நிற்பவர்களுக்கு மட்டும் டோக்கன் அளிக்கப்பட்டு, வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாக்குபதிவு நிறைவு பெற்ற இடங்களில் வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!