
PM SHRI scheme : தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் மும்மொழிக்கொள்கைக்கு எதிராக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே மத்திய அரசு மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் தேசிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் கல்வி திட்டங்களுக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய 2152 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் எதிரொளித்தது.
தமிழக அரசு ஒப்புதல்- அமைச்சர் வெளியிட்ட கடிதம்
பாராளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த பரபரப்பான நிலையில் மத்திய அரசு கொண்டு வரும் பிம் ஶ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு ஏற்கனவே அனுப்பிய கடிதத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார். அதில், பிஎம்ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் ஆதாயங்களை விட குழந்தைகளின் நலனே முக்கியம். பிம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழகம் ஒப்புதல் தந்தது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள்
இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், இந்தக் கடிதத்தில், தமிழ்நாடு PM SHRI பள்ளிகளை நமது மாநில அரசு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் அல்ல என்றும் அந்த கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை அல்லது NEP-ஐ முழுமையாக ஏற்றுக்கொள்வதாக நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ, அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் - அதிகமாகவோ, குறைவாகவோ எதுவும் இல்லை என கூறியுள்ளார். எனே உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள் என அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.