கொடநாடு வழக்கு - என்னை ஜெயில்லயே அடைச்சுடுங்க சார்.. நீதிபதிக்கு 'அதிர்ச்சி' கொடுத்த வாளையார் மனோஜ்

By Raghupati R  |  First Published Feb 4, 2022, 6:17 AM IST

நிபந்தனை ஜாமீனை ரத்து செய்து சிறைக்கு அனுப்ப கோரிய வாளையார் மனோஜின் மனு மீதான விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23 -ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.

பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

Latest Videos

undefined

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2-வது நபரான வாளையாறு மனோஜ் இரண்டாண்டுகள் சிறையில் இருந்த நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. நீலகிரியில் உள்ள இரு நபர் உத்தரவாதம் அளித்தால், ஜாமீன் வழங்கப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ளவர்கள் உத்தரவாதம் அளிக்காத நிலையில், ரத்த சொந்தங்கள் இருவர் உத்தரவாதம் அளிக்கலாம் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. 

ஆனால், வாளையாறு மனோஜின் மனைவி மட்டுமே உத்தரவாதம் அளிக்க முன்வந்தார். இதனால், அவர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வர முடியவில்லை. இந்நிலையில், அவரது வழக்கறிஞர் முனிரத்னம், ஜாமீன் நிபந்தனையில் தளர்வு வேண்டி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது, ஜாமீன்தாரர்கள் தத்தமது ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரடியாக நிறுத்தப்பட்ட நிலையில், ஆய்வுக்குப் பின் அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதனால், வாளையாறு மனோஜ் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவர் உதகையிலேயே தங்கியருந்து, வாரம்தோறும் திங்கள்கிழமை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு நேரடியாக வந்து கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வாளையாறு மனோஜ் தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து தன்னை மீண்டும் சிறைக்கு அனுப்பக் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். வாளையாறு மனோஜின் வழக்கறிஞர் முனிரத்தனம் கூறும்போது, ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனோஜ், மூன்று முறை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு, தங்க இருப்பிடமும், உணவும் கிடைக்கவில்லை எனவும், புலன் விசாரணை என்று கூறி வழக்கை அரசுத் தரப்பு தங்கள் விருப்பத்திற்கு காலம் தாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனால், தன்னை மீண்டும் சிறைக்கே அனுப்பிவிடக் கோரி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த மனுமீதான விசாரணை  ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜரான சிறப்பு நீதிபதி இதுகுறித்து பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கேட்டார். இதையடுத்து நீதிபதி நிபந்தனை ஜாமீனை ரத்து செய்து சிறைக்கு அனுப்ப கோரிய வாளையார் மனோஜின் மனு மீதான விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

click me!