பாமகவில் இப்படித்தான் சீட் கிடைத்தது: மனம் திறந்த தங்கர் பச்சான்!

By Manikanda PrabuFirst Published Mar 23, 2024, 5:54 PM IST
Highlights

பாமகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் மனம் திறந்துள்ளார்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பாமகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாமகவில் வேட்பாளராக அறிவிக்கப்படுவேன் என எனக்கே தெரியாது. நள்ளிரவில் நடந்தது. தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது அழைப்பு வந்தது. அப்போது அவர்களது விருப்பத்தை சொன்னார்கள். யோசித்து சொல்கிறேன் என்றேன். காலம் கொடுக்க வேண்டும்  என கேட்டுக் கொண்டேன். அனைத்தும் ஒரு மணி நேரத்தில் நடந்தது. படப்படிப்பை தயார் பண்ணும் வேலைகளுக்காக லண்டனுக்கு சென்றிருந்தேன்.  அப்போது அழைப்பு வந்ததால் உடனடியாக கிளம்பி வந்து விட்டேன்.” என்றார்.

கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தன்னை தெரியும் என்ற தங்கர் பச்சான், “37 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில் தொடர்ந்து இயங்குகிறேன். என்னுடைய எழுத்து, பேச்சு, திரைப்படம் அனைத்தும் என் மக்கள் சார்ந்த படைப்புதான். நான் பேய் படமோ, சண்டை காட்சி படமோ, மக்களின் பணத்தை குறி வைத்தோ படம் எடுக்கவில்லை. என் மக்களின் வாழ்க்கையை மட்டுமே நான் பதிவு செய்துள்ளேன். என் மக்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் முதல் ஆளாக இருந்திருக்கிறேன். மக்கள் சார்ந்து அனைத்து போராட்டங்களுக்கும் முன்னின்றுள்ளேன். நான் மக்களுக்கு புதியவன் இல்லை.இன்றைக்கு தேர்தல் வந்து விட்டதால் வெற்றி பெற்று விடலாம் என்பதால், கட்சிகளை பிடித்து வந்த வேட்பாளர் நான் இல்லை. நான் என்னுடைய மக்களை காப்பாற்ற வந்துள்ளேன்.” என்றார்.

சிவகங்கை தொகுதி வேட்பாளர்: பாஜக தலைமைக்கு காங்கிரஸ், அதிமுக நன்றி தெரிவித்து போஸ்டர்!

தொடர்ந்து பேசிய  அவர், தமிழ்நாட்டில் அதிகப்படியான பாதிப்புக்குள்ளான மாவட்டம் கடலூர் மாவட்டம். இந்த விஷயம் வெளியே வரவில்லை. இங்கு தண்ணீர் இல்லை. நிலத்தடி நீரை பாதுகாக்க அரசு எதுவும் செய்யவில்லை. அதற்காகத்தான் நெய்வேலியை எதிர்த்து குரல் கொடுக்கிறோம் என்றார். சிறுபான்மை, பெரும்பான்மை என எதுவும் இல்லை. அனைவரும் மனிதர்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும் எனவும் தங்கர் பச்சான் கூறினார்.

முன்னதாக, கடலூர் மக்களவை தொகுதி இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த தங்கர் பச்சான், “கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.” என்றார்.

click me!