Latest Videos

தமிழ்நாட்டைத் தேடி வரும் கூகுள்! பிக்சல் ஸ்மார்ட்போன், ட்ரோன்களை தயாரிக்கத் திட்டம்!

By SG BalanFirst Published May 23, 2024, 4:00 PM IST
Highlights

கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டில் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்க முன்வந்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் நிறுவன உயர் அதிகாரிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்தித்துப் பேச உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனம் பிக்சல் ஸ்மார்ட்போன்களை தமிழகத்தில் தயாரிக்க உள்ளதாகவும் இதற்காக ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்காக ஐபோன்களை உற்பத்தி செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக உள்ளது. இங்கு அதிகரித்து வரும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கான தேவையைப் பயன்படுத்திக்கொள்வதற்காக, கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை ஆயத்தமாகி வருகிறது.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் அதன் துணை நிறுவனமான விங் எல்எல்சி மூலம் ட்ரோன்களை தயாரிக்கத் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிறுவனம் தற்போது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் வணிகத் தேவைக்கான ட்ரோன்களை தயாரித்து வழங்குகிறது.

சில வாரங்களுக்கு முன் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் பிற அதிகாரிகள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கூகுள் நிர்வாகிகளை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது அமைச்சர் ராஜா கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார்.

அதன் விளையாக இப்போது கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டில் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்க முன்வந்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் நிறுவன உயர் அதிகாரிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்தித்துப் பேச உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன்களுக்குப் போட்டியாக கூகுள் பிக்சல் மொபைல்களைக் கொண்டுவந்தது. ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு கடைகள் மும்பை மற்றும் டெல்லியில் திறக்கப்பட்டன.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஆப்பிள் 2024 நிதியாண்டில் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்களை தயாரித்துள்ளது. இப்போது இந்தியாவில் விற்பனையாகும் ஐபோன்களில் 14 சதவீதம் அல்லது 7ல் 1 ஐ உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது.

click me!