மேகதாது அணை விவகாரம்... மார்ச்.24 அன்று ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது விவசாயிகள் சங்கம்!!

Published : Mar 16, 2022, 02:47 PM IST
மேகதாது அணை விவகாரம்... மார்ச்.24 அன்று ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது விவசாயிகள் சங்கம்!!

சுருக்கம்

மேகதாது அணைக்கட்டுவதை தடுக்கக்கோரி மார்ச் 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

மேகதாது அணைக்கட்டுவதை தடுக்கக்கோரி மார்ச் 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. நதிநீர் பிரச்சனை குறித்த மோதல் என்பது பல ஆண்டுகளாக தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கு இடையே இருந்து வருகிறது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டப்போவதாக அறிவித்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அன்று முதல் இன்று வரை மேகதாது விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுக்குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக விவசாயிகள் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா நெல் பயிர் செய்வதற்கு காவிரி நீரையே நம்பியிருக்கும் நிலையில், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும் என்றும் அதைச் செயல்படுத்தக் கூடாது எனக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக மாநில பட்ஜெட்டில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமான பணிக்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரிய இடியாக விழுந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் மேகதாது அணைகட்டுவதை தடுக்க கோரி ஒகேனக்கல்லில் 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. கர்நாடக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அம்மாநில சட்டப்பேரவையில்  அண்மையில் கர்நாடக முதல்வரும், நிதியமைச்சருமான பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அதில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட, நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக  குறிப்பிட்டிருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்  தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி தலைமையில்  விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  மேகதாது அணைக்கட்டுவதை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய சின்னசாமி, காவிரியில் வரும் தண்ணீரை தடுக்கின்ற வகையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு ஒரு துளி கூட தண்ணீர் கிடைக்காத சூழல்  ஏற்படும். எனவே கர்நாடக அரசின் திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசு அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும். மேலும் வரும் 24 ஆம் தேதி கர்நாடகாவில் மேகதாது அணைகட்டுவதை தடுக்க கோரி தருமபுரி தலைமை தபால் அலுவலகத்திலிருந்து ஒகேனக்கல் வரை வாகன பேரணி புறப்பட்டு,  ஒகேனக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!