பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது.
உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும். இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் பாராளுமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
முதல் நாளான இன்று சிவகங்கை, திருநெல்வேலி, விழுப்புரம், தூத்துக்குடி, கடலூர், திருபெரும்புதூர், ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை நடைபெற உள்ளது. நாளை 17 ஆம் தேதி கிருஷ்ணகிரி, திருச்சி, அரக்கோணம், திருப்பூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவை, திண்டுக்கல், சிதம்பரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
18 ஆம் தேதி திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், புதுச்சேரி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், தர்மபுரி, நாகப்பட்டினம், தேனி, நீலகிரி, தென்காசி, சேலம், ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் முதற்கட்ட பொதுக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி., சிவகங்கையில் அமைச்சர் பெரியசாமி பேச
உள்ளனர். அதேபோல கடலூரில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், விழுப்புரத்தில் ஆ.எஸ்.பாரதி, தூத்துக்குடியில் பொன்.முத்துராமலிங்கம், ஸ்ரீபெரும்புதூர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈரோட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச உள்ளனர்.
நாமக்கல்லில் தமிழச்சி தங்கபாண்டியன், கன்னியாகுமரியில் திண்டுக்கல் லியோனி, மயிலாடுதுறையில் சபாபதிமோகன், திருவண்ணாமலையில் கோவி.செழியன் ஆகியோர் மேற்கண்ட 11 இடங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
திருநெல்வேலியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக எம்.பி கனிமொழி, “மத்திய அரசின் திட்டங்கள், மசோதாக்கள் என அனைத்திலும் மாநில உரிமைகளையும், அடையாளங்களையும் அழிக்கக் கூடியதாக இருக்கின்றன. புரியாத மொழிகளில் மத்திய அரசின் திட்டங்கள் உள்ளதோடு மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
பாஜகவுக்கு வாக்களிக்காத மக்களின் நிலை என்னவானாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒரு பைசா நிதி கூட தராமல் மோடி அரசு வஞ்சிக்கிறது, தமிழ் பழமையான மொழி என்பது மோடி சொல்வதற்கு முன்னரே எங்களுக்கு தெரியும். இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள், இந்தியா கூட்டணி, ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும்.
கோவில் கோவிலாக சென்ற பிரதமர் ஒரு முறையாவது பற்றி எரியும் மணிப்பூருக்கு செல்லவில்லை. மத்திய அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, நிறைவேற்ற போவதும் இல்லை. அறிவித்த ரூ. 15 லட்சம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. நாட்டிற்கே உணவளிக்கும் விவசாயிகளை தீவிரவாதிகளை போல நடத்தும் ஆட்சி தான் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி” என்றார்.
குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?