
துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு சார்பில் அமைக்கபட்டுள்ள அரங்கினை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அங்கு சென்றுள்ளார். தமிழக முதலமைச்சராக அவர் பதவியேற்ற பிறகு அவர் செல்லும் முதல் வெளிநாட்டு பயணமாகும். உலக அளவில் 192 நாடுகள் பங்கேற்கும் துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
"
ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழ்நாட்டிற்குமான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதுமே இந்த பயணத்தின் நோக்கம் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட முதலமைச்சரை அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். இங்கிருந்து 4 மணிக்கு புறப்பட்ட முதலமைச்சர் இரவு துபாய் சென்றடைந்தார். அவரை துபாய்கான இந்திய தூதர் ஜெனரல் அமீர் பூரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், அரசு மரியாதையுடன் வரவேற்ற அமீரக அதிகாரிகள், அரசின் சொந்த பி.எம்.டபிள்யூ காரில் அழைத்து சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை துபாயில் ஐக்கிர அரபு அமீரக வர்த்தகம் மற்றும் பொருளாதார துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளார் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர். இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு அமைச்சர்களையும் தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்கிட, முதலீட்டாளர்கள் சூழுவினையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
"
துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைத்த முதலமைச்சரை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சந்தித்து தனது இசை அரங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற அங்கு சென்ற முதலமைச்சருக்கு, தான் இசையமைக்கும் மூப்பில்லா தமிழே... தாயே என்ற ஆல்பத்தை ஏ.ஆர்.ரகுமான் போட்டுக் காட்டினார். இதில் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர், முதலமைச்சருடன் ஆல்பம் குறித்து ஏ.ஆர். ரகுமான் விளக்கினார்