
அடுத்த இரண்டு வாரம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. 30 சதவீதத்திலிருந்து 10 – 12 சதவீதம் வரை நோய் தொற்று பரவல் குறைந்துள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பொது சுகாதாரத் துறை ஆகியவை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்த்து விட வேண்டும். அத்துடன் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது. அப்பகுதியில் பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 33.46 லட்சம் மாணவர்கள் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு துரிதமாக பணி நடைபெற்று வரும் நிலையில், 77 சதவீதம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் 2.5 லட்சம் இலக்கு உள்ள நிலையில் 1.80 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய கூடாது. முக கவசம் அணிவது என்பது சவாலாக இருக்கும் பட்சத்தில் தனி இடத்தில் அதை தளர்த்திக் கொள்ளலாம். அடுத்த இரண்டு வாரம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட நோய் தொற்று குறைந்து விடுகிறது. தொற்று நோய் ஏற்பட்டவர்கள் 4 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளனர். இதனால் இதே ஒத்துழைப்பை மக்கள் அரசுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.