பொள்ளாச்சி பாலியல் குற்றாவாளிகள் தண்டிக்கப்படாத நிலையில், கொங்கு மண்ணில் அடுத்த பாலியல் சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
‘அண்ணா ப்ளீஸ் என்னை விட்ருங்க’... ‘டேய் உன்ன நம்பிதான டா வந்தேன்’ என்று கதறும் பெண்களை பெல்டால் அடித்து ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த பெண்களின் கதறல் சத்தம் இன்னும் நம் காதுகளை விட்டு ஓயாத நிலையில், கொங்கு மண்ணில் அடுத்த கூட்டு பாலியல் சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களிடம் முகநூல் மூலம் உள்ளிட்டவைகள் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. மேலும் பலருக்கு அப்பெண்களை பணத்துக்கு இரையாக்கியும் வந்துள்ளது.
இந்த விவகாரம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளி வந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, திருநாவுக்கரசு(25), சபரிராஜன்(25), வசந்தகுமார்(27), சதீஷ் (28), மணிவண்ணன்(25) ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, இருந்த அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளராக இருந்த அருளானந்தம், முன்னாள் இளைஞரணி இணை செயலாளர் ஹேரன்பால், பாபு ஆகிய 3 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு, ஒருவர் என மொத்தம் 9 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கடந்த 2021ஆம் ஆண்டு இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வெள்ளகோவில் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 7 பேரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 9ஆம் தேதி அப்பகுதியில் நடந்த கோயில் விழா கலை நிகழ்ச்சியை பார்க்க தனது தாயாருடன் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த இருவர், நடனம் மீது ஆர்வம் கொண்ட அந்த சிறுமியிடம், நடனம் குறித்து பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து, யூடியூப்பில் நடன வீடியோ எடுத்து பதிவிடுவதாக கூறி சிறுமியை தனிமையில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
லிஃப்ட் கொடுத்தது ஒரு குத்தமா? தூத்துக்குடியில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.. என்ன நடந்தது?
பின்னர், அச்சிறுமியை கலை நிகழ்ச்சி நடந்த இடத்தில் விட அவர்கள் வந்தபோது, இந்த விவகாரத்தை அறிந்த மேலும் 5 இளைஞர்கள், சிறுமியை காரில் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் விட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதனிடையே, தனது மகளை காணவில்லை என சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காங்கயம் அனைத்து மகளிர் போலீஸார் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன், சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில், வெள்ள கோவில், மூலனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மணிகண்டன் (29), பிரபாகரன் (32), தினேஷ்குமார் (28), பாலசுப்பிரமணி (30), நவீன்குமார் (26), நந்தகுமார் (30), தமிழ்ச்செல்வன் (28) ஆகிய 7 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில் தினேஷ் என்பவர் அதிமுக ஐடி விங்கை சேர்ந்தவர் எனவும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரின் உறவினர் எனவும் கூறப்படுகிறது. இதனை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கொங்கு மண்ணில் அதிமுகவினரால் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படாத நிலையில், கொங்கு மண்ணில் அடுத்த பாலியல் சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.